எந்த இழப்பு ஏற்பட்டாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை: கேப்பாப்புலவு மக்கள் உறுதி

koppapulavu1என்ன நடந்தாலும், எந்தவகையான இழப்புக்கள் ஏற்பாட்டாலும் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

படையினரின் வசமுள்ள தமது சொந்தக் காணிகள் திரும்பக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், கேப்பாப்புலவு மக்களின் போராட்டம், இன்றைய தினம் இருபத்தியெட்டாவது நாளாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இராணுவத்தினர் வசமுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி, கடந்த 01 ஆம் திகதி தொடக்கம் கேப்பாப்புலவு மக்கள் பிரதான வீதியோரத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இந்தப் போராட்டம் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமக்கு அரசாங்கத்தினால் நல்ல தீர்வொன்று கிடைக்கும் என எதிர்ப்பார்த்துக் காத்திருந்த போதிலும், இதுவரை தமக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

எனவே இனிவரும் காலங்களில் தமது போராட்ட வடிவத்தை மாற்றியமைத்து, இன்னும் வலுவுடன் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் போராட்டகாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களின் உடல் ரீதியில் சோர்வடைந்து காணப்படுகின்ற போதும், தமது நிலங்கள் விடுவிக்கப்பட்டு, காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முகாம்களில் பல்வேறு துன்பங்களின் மத்தியில், தொழில் வாய்ப்பு எதுவுமின்றி தாம் வாழ்ந்து வருவதாகவும் கேப்பாப்புலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: