பக்கத்தான் ஹராபான் ஆலோசகர்களாக டாக்டர் வான் அசிசா மற்றும் மகாதிர்

harapanபக்கத்தான்  ஹராபான்,    நாடாளுமன்ற   எதிரணித்   தலைவர்   டாக்டர்   வான்   அசிசா   வான்  இஸ்மாயிலையும்   முன்னாள்  பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்டையும்   அதன்  பூர்வாங்கக்  குழு    ஆலோசகர்களாக   நியமிக்க   ஒப்புக்கொண்டுள்ளது.

திங்கள்கிழமை   பக்கத்தான்  ஹராபான்   தலைவர்   மன்றக்  கூட்டம்  நடைபெற்றது.  கூட்டணியின்  புதிய    உறுப்பினரான  பார்டி  பிரிபூமி  பெர்சத்து  மலேசியா(பெர்சத்து)வும்   கலந்து  கொண்ட   அக்கூட்டத்தில்   18-பேரடங்கிய    ஹராபான்   பூர்வாங்கக்  குழு   அமைக்க   முடிவெடுக்கப்பட்டது.

“18  பேரில்  நந்நான்கு   பேரை   நான்கு   கட்சிகளிலிருந்தும்  நியமித்து     வான்   அசிசாவுக்கும்   மகாதிருக்கும்   அதில்   சிறப்புப்  பதவிகள்  கொடுப்பது   என்று   முடிவு   செய்தோம்”,  என  பார்டி  அமனா   நெகாரா (அமனா)   தொடர்பு  இயக்குனர்   காலிட்  சமட்   இன்று   கூறினார்.

“வான்  அசிசா,  மகாதிர்   இருவரையுமே   எங்கள்  ஆலோசகர்களாக   நியமனம்   செய்வது   என்று   தீர்மானித்தோம்.  இருவருக்கும்  சமமான  பதவிதான்.  அவர்கள்   இருவருமே  முக்கியமானவர்கள்”,  என்றாரவர்.

பூர்வாங்கக்  குழுவில்   எல்லாப்  பங்காளிக்  கட்சிகளின்   உறுப்பினர்களும்  இடம்பெற்றிருப்பதால்   அதுவே   கூட்டணியின்    தலைமைப்  பொறுப்பையும்  ஏற்கும்  என்றாரவர்.