விவசாயிகளை பாம்புக் கறியை தின்ன வைத்ததுதான் மோடியின் சாதனை… அய்யாகண்ணு வேதனை

snake-eating-protest

டெல்லி: தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 16 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியதால் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். பலர் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.

எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் 16வது நாளான இன்று அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விவசாயிகள் ஒரு தூசி

16வது நாளாக நாங்கள் இங்கு போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. எங்களை ஒரு தூசியாக மத்திய அரசு நினைக்கிறது. பிரதமர் மோடியும் அப்படித்தான் நினைக்கிறார். நாங்கள் என்ன செய்வது?

மோடியின் சாதனை

தமிழ்நாட்டில் விளைச்சல் இல்லை. சோற்றுக்கே வழியில்லை. பாம்புக் கறி தின்னுவதற்கு எங்களை விட்டிருக்கிறது இந்த அரசு. இதுதான் எங்களின் இன்றைய நிலை. இதுதான் இந்த அரசின் சாதனை.

ஊருக்கு போய்..

அதே போன்று இங்கு உண்ணாவிரதம் இருக்கும் விவசாயின் மனைவி பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் மரணம் அடைந்துவிட்டார். இனி நான் ஊருக்கு போய் என்ன செய்யப் போகிறேன் என்று கூறி உண்ணாவிரதத்தில் விவசாயி ஈடுபட்டுள்ளார்.

நிமிடத்தில் தள்ளுபடி

கடன் தள்ளுபடியை உடனடியாக ஒரே நிமிடத்தில் நிறைவேற்றி விடலாம். ஆனால், அதனை மத்திய அரசு செய்ய மறுக்கிறது. மோடி நினைத்தால் இதனை செய்யலாம். அதே போன்று வறட்சி நிவாரணத்தை உடனடியாக கொடுக்க முடியும். நதி நீர் இணைப்பிற்கு பணத்தை ஒதுக்கீடு செய்யுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

மோடி மறுப்பு

எங்களை சந்திக்கவே மறுக்கிறார் மோடி. இந்த நாட்டின் முதல் குடிமகன் ஜனாதிபதி எங்களைப் பார்த்து 15 நிமிடங்கள் பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், மக்களிடம் பேச வேண்டியவர் எங்களிடம் பேச மாட்டேன் என்கிறார். அதுதான் எங்கள் கவலை.

tamil.oneindia.com

TAGS: