பினாங்கில் மூன்று விளிம்புநிலை தொகுதிகளுக்கு பெர்சத்து குறி

bersatuபார்டி  பிரிபூமி  பெர்சத்து  மலேசியா(பெர்சத்து),  பினாங்கில்  கப்பலா  பத்தாஸ்,  தாசெக்  குளுகோர்,   பாலேக்   பூலாவ்   ஆகிய  மூன்று  நாடாளுமன்றத்   தொகுதிகள்மீது    கண்  வைத்துள்ளது.

அத்தொகுதிகள்   இப்போது   அம்னோ  வசமுள்ளன.  ஆனால்,  அத்தொகுதிகளில்   அம்னோ  வலுவாக   இல்லை    என்று   கூறிய    பினாங்கு   பெர்சத்து   தலைவர்   மர்சுகி   யஹயா,  அத்  தொகுதிகளில்    அம்னோவை   எதிர்க்க  தம்முடைய   கட்சி  தயாராக  உள்ளதாகக்  கூறினார்.

“அவற்றை   எங்களுக்குக்  கொடுப்பது   பற்றி   பக்கத்தான்   ஹராபான்   தலைவர்  மன்றம்தான்   முடிவு   செய்ய   வேண்டும்.  நாங்கள்   அங்கு   வெற்றிபெற   நல்ல  வாய்ப்பு   உள்ளது.  அங்கு   அரசியல்   நிலவரம்  அம்னோவுக்குச்   சாதகமாக   இல்லை”,  என  மர்சுகி   கூறினார்.

“அண்மையில்   நாங்கள்   அப்பகுதிகளுக்குச்   சென்றபோது   நல்ல   வரவேற்பு  கிடைத்தது”,  என்றாரவர்.

தாசெக்  குளுகோர்,   கப்பலா  பத்தாஸ்   உள்பட    31  நாடாளுமன்றத்  தொகுதிகளில்   அம்னோ   தோற்கும்   சாத்தியம்   உள்ளதாக    அவர்   சொன்னார்.   கடந்த    பொதுத்   தேர்தலில்  அத்  தொகுதிகளில்    சொற்ப  பெரும்பான்மையில்    அம்னோ   வெற்றி  பெற்றது.