டெல்லியை உலுக்கிய தமிழக விவசாயிகள் போராட்டம்! தற்காலிகமாக வாபஸ்

டெல்லியில் கடந்த 37 நாட்களாக போராடி வந்த தமிழக விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

வறட்சி நிவாரணம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 37 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், விவசாயிகளின் பிரதிநிதிகள் மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு, எங்களது கோரிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் தெளிவாக கூறியுள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அடிப்படையில் 2 நாட்களுக்கு போராட்டத்தை ஒத்திவைப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

-lankasri.com

TAGS: