மக்ரிப் தொழுகைக்காக கடை மூடுதல் முஸ்லிம் அல்லாதவர்களைப் பாதிக்காது என்கிறார் ஃபாட்டா

 

Fattahமக்ரிப் தொழுகைக்காக சிறிது நேரத்திற்கு வியாபாரத்தை மூடக் கோரும் விதி முஸ்லிம்களுக்கு மட்டுமே என்று கிளந்தான் ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் ஃபாட்டா முகமட் கூறுகிறார்.

இதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர், சாலோர் சட்டமன்ற உறுப்பினர் ஹுசாம் மூசாவைத் தவிர என்று அப்துல் ஃபாட்டா இன்று தொடர்பு கொண்ட போது கூறினார்.

“எனது பேச்சு மிகத் தெளிவானது – இவ்விதி பசார் மாலம் முஸ்லிம் வியாபாரிகளுக்கு மட்டுமே. ஆனால், அவர் (ஹுசாம்) (எல்லா) கடைகளுக்கும் என்று பெரிதுப்படுத்துகிறார்.

“அவருக்கு என்ன வேண்டும் … ஹுசாமுக்கு என்ன வேண்டும் என்று அவரிடம் போய்க் கேளுங்கள்”, என்றார் ஃபாட்டா.

இன்றைய சினார் ஹரியான் செய்திப்படி, கிளந்தானிலுள்ள பசார் மாலம் வியாபாரிகள் அனைவரும் முஸ்லிம்கள். ஆகவே, இந்த விதி முஸ்லிம் அல்லாதவர்களைப் பாதிக்கவில்லை என்று ஃபாட்டா கூறியிருக்கிறார்.

அவருடைய தற்போதைய நிலைப்பாடு அவருடைய முன்னைய நிலைப்பாட்டை விட வேறுப்பட்டிருக்கிறது என்பது ஏப்ரல் 17, ஃபிரி மலேசியா டுடே செய்தியிலிருந்து தெளிவாகிறது.

“அனைத்து வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர், முஸ்லிம் அல்லாதவர்களும் உட்பட. இது அவர்களுக்கு ஓய்வு எடுக்கவும் தொழுகை செய்யவும் நேரத்தை அளிக்கிறது.

இது ஒரு நீண்ட நேரம் அல்ல, 10 நிமிடங்கள் மட்டுமே. எல்லா வியாபாரங்களும் நிறுத்தப்படுகின்றன. தொழுகைக்குப் பின்னர் வியாபாரம் தொடங்கப்படுகிறது என்று அவர் அச்செய்திதளத்திடம் கடந்த திங்கள்கிழமை கூறியிருக்கிறார்.

மேலும், இது சுற்றுப்பணிகளை கவரும் ஒன்றாகும், ஏனென்றால் அவர்கள் இந்த நடைமுறையைத் தாங்களாகவே காண விரும்புகின்றனர்.

“இது நமது பசார் மாலத்தை மற்றவைகளைவிட மாறுபட்டதாக்குகிறது மற்றும் இது முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையையும் உண்டாக்கவில்லை”, என்று ஃபாட்டா மலேசியாகினியிடம் கூறினார்.