நீட் தேர்வில் சலுகை, காவிரி மேலாண்மை வாரியம் தேவை.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் திட்டவட்டம்

edappadi-palanisamyடெல்லி: நீட் தேர்வு ரத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்தார்.

திட்டக்கமி‌ஷனை கலைத்துவிட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக் (கொள்கை குழு) என்ற அமைப்பை மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. மாநில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான இந்த கூட்டம் ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும். இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டு, தங்கள் மாநில திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கும்படி வலியுறுத்துவார்கள்.

நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர்ர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு நேற்று மாலை புறப்பட்டார். முதல்வருடன் உயர் அதிகாரிகளும் சென்றனர். முன்னதாக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.

இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்றார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். இலங்கை வசமுள்ள 133 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். “கச்சத் தீவை மீட்பதே மீனவர் பிரச்சனைக்கு நீண்டகால தீர்வாக அமையும். மருத்துவம்,பொறியியல் படிப்புகளுக்கு நீட் பொது நுழைவுதேர்வை கட்டாயமாக்க கூடாது, நீட் உட்பட பொதுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

எரிபொருள், உரம், உணவுக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்துவதை ஏற்க முடியாது. பயிர்க் காப்பீட்டு தொகையை இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை தேவைப்படுகிறது. மேலும், பழங்குடியின மாணவர்களுக்கான ரூ.1,882 கோடி உதவித்தொகையை தர வேண்டும், என நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கைவிடுத்து பேசினார். முன்னதாக அவர் டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார்.

tamil.oneindia.com

TAGS: