திருப்பூர் அருகே டாஸ்மாக் மதுக்கடையை அடித்து நொறுக்கி சூறையாடிய பொது மக்கள்

திருப்பூர்: திருப்பூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் பெண்கள் டாஸ்மாக் கடையை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள டாஸ்மாக் கடைகளால் விபத்துகள் அதிகரிப்பதாலும், சமூக பாதிப்புகள் ஏற்படுவதாலும் அந்தக் கடைகளை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

people protest against tasmac shop near tirupur

இதையடுத்து நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த மது கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட கடைகளுக்கு பதிலாக வேறு இடங்களில் புதிய மது கடைகள் தொடங்க பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனால் தினமும் மது கடைக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் அரங்கேறி வருகிறது.

people protest against tasmac shop near tirupur

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் முதலிபாளையத்தில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடை மற்றும் அதையொட்டி இருந்த பார் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். பாருக்குள் இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசினர்.

மேலும் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. குறைந்த அளவிலான போலீசாரே இருந்ததால் பொதுமக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா தலைமையில் அதிரடி படை போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் பொதுமக்களை சமாதான செய்ய முயற்சி செய்தனர். ஆனால் பொதுமக்கள் மதுக்கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என கூறி காங்கயம் ரோட்டில் சாலைமறியலை தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

-http://tamil.oneindia.com

TAGS: