ஆவணங்கள் இல்லாத இந்தியர்களை அரசாங்கம் பதிவு செய்யப் போகிறதாம், சுப்ரமணியம் கூறுகிறார்

 

undocumentedIndiansபிரதமர் நஜிப்பால் அறிவிக்கப்பட்ட மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தின் ஓர் அங்கமாக ஆவணங்கள் இல்லாத இந்தியர்களை நாடு தழுவிய அளவில் பதிவு செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.

இந்நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஏதுவாக நாடு தழுவிய அளவில் 23 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அது முதலில் சிலாங்கூர் மாநிலத்தில் ஜூலை 3 இல் தொடங்கி மாதம் முழுவதும் நடைபெறும் என்று மஇகா தலைவர் எஸ். சுப்ரமணியம் கூறியதாக நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நடவடிக்கையில் குடியுரிமை இல்லாதவர்கள், தாமதமாகப் பிறப்பு பதிவு செய்யப்பட்டவர்கள் மற்றும் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆகிய அனைவரையும் பதிவு செய்வோம் என்றும் அவர் கூறினாராம்.

“கடந்த காலத்தில் எங்களிடம் பதிவு செய்திருந்தவர்களின் பிரச்சனைகளையும் தீர்க்கும் நோக்கத்தைகூட நாங்கள் கொண்டிருக்கிறோம்”, என்று அமைச்சர் தெரிவித்ததாக என்எஸ்டி செய்தி கூறுகிறது.

துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான அஹமட் ஸாகிட் ஹமிடி இதற்காக அவரது அமைச்சியிலிருக்கும் அதிகாரிகள் உள்ளடங்கிய ஒரு குழுவை அமைத்து உதவ முன்வந்துள்ளதாகவும் சுப்ரமணியம் கூறினார்.

இந்நாட்டில் 200,000 நாடற்ற இந்தியர்கள் இருப்பதாக சிலர் கூறிக்கொள்வதை சுப்ரமணியம் மறுத்ததாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் 12,000 பேர்தான் பதிவு செய்துகொள்ள வந்தனர். ஆகவே, அவர்கள் கூறிக்கொள்வது போல பதிவு செய்யப்பட வேண்டியவர்கள் அதிகமாக இருக்கிறார்களா என்பது இந்த நடவடிக்கையின் மூலம் ஜூலையில் தெரிந்துவிடும் என்றாரவர்.

கடந்த காலத்தில் மைடாப்டார் மூலம் மஇகா பதிவு செய்திருந்த 12, 726 பேரில் 7,126 பேருக்கு உதவியுள்ளோம். நிராகரிக்கப்பட்ட 626 மனுக்கள் மீண்டும் பரிசீலிக்கப்படுகிறது என்று சுப்ரமணியம் தெரிவித்தார்.