ஸக்கீர் விவகாரத்தில் மஇகாவுக்கு எதிராக பெர்காசா போர் முரசு கொட்டுகிறது

 

perkasaMicமலாய்க்காரர் உரிமைக்காகப் போராடும் பெர்காசா இன்று மஇகாவுக்கு எதிராகப் போர் பிரகடனம் செய்துள்ளது. மஇகா முஸ்லிம்களின் உணர்ச்சிகளை மதிக்கவில்லை என்று அது கூறிக்கொண்டது.

மஇகாவை நிராகரிக்கக் கோரும் பரப்புரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியத்தின் தொகுதியான சிகாமட்டில் தொடங்கும் என்று பெர்காசாவின் தலைமைச் செயலாளர் ஸைட் ஹசான் ஸைட் அலி கூறினார்.

ஸக்கீர் நாய்க் இஸ்லாமிய அரசுக்காக (ஐஎஸ்) மலேசியாவில் உறுப்பினர்களைத் திரட்டுகிறார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மஇகாவின் பொருளாளர் எஸ். வேள்பாரி விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து பெர்காசா இந்த மஇகா எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஸக்கீர் பெர்காசாவின் கௌரவ உறுப்பினர். மஇகாவின் அறிக்கை பெர்காசாவை அவமானப்படுத்துவதாகும் என்று ஸைட் அலி கூறினார்.

வேள்பாரியின் அறிக்கை பெர்காசா ஐஎஸுடன் குலவுவதாக தெளிவாகக் கூறுகிறது. “அது துடுக்குத்தனமானதோடு அடிப்படையற்றது. நாங்கள் எங்களுடைய பொறுமையை இழந்து விட்டோம்”, என்றாரவர்.

“இது ஒரு மிகக் கொடிய அறிக்கை, மலாய்க்காரர்களின் ஆதரவு வாக்குகளால் மட்டும் இருக்கைகளை வென்ற ஓர் அற்பமான கட்சியின் தலைவரால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது…அவர் இன்னலைத் தேடுகிறார்”, என்று பெர்காசா தலைமையகத்தில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஸைட் ஹசான் கூறினார்.

வேள்பாரியின் அறிக்கை மலாய்க்காரர்கள் 14 ஆவது பொதுத் தேர்தலில் மஇகாவுக்கு வாக்களிப்பதைத் தடை (ஹராம்) செய்கிறது.

“மஇகா இஸ்லாத்தை அவமதித்துள்ளதால் மஇகாவுக்கு வாக்களிப்பது ஹராம் என்று நாங்கள் முஸ்லிம்களிடம் கூறுவதற்கு பரப்புரை செய்வோம்”, என்று அவர் மேலும் கூறினார்.

பெர்காசாவை ஐஎஸுடன் தொடர்புபடுத்தியதற்காக வேள்பாரி மன்னிப்பு கோர வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு விளக்கம் அளித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் டில்லி உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு தீர்ப்புமன்றம் (Indian Judicial Tribunal) கூறியுள்ளத்தைத்தான் தமது அறிக்கையில் கூறியிருப்பதாக வேள்பாரி தெரிவித்தார்.

தமக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடரும்படி பெர்காசாவுக்கும் ஸக்கீருக்கும் வேள்பாரி சவால் விட்டார்.