மீண்டும் தயாராகி விட்டதாக கூறும் விடுதலைப்புலிகள்? புலனாய்வுத் துறையின் எச்சரிக்கை!!

Logo-LTTEநாம் மீண்டும் தயார் என்ற செய்தியினை விடுதலைப்புலிகள் தெரிவித்து உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் துணைத்தலைவர் ஜயன்த சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். மேலும் அங்கு தொடர்ந்த அவர்,

நாட்டில் தொடர்ந்தும் இராணுவ வீரர்களும், புலனாய்வுப் பிரிவினரும் கைது செய்யப்பட்டுக் கொண்டு வருவதோடு, குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினமும் 5 இராணுவத்தினரை கைது செய்ய குற்றத் தடுப்புப் பிரிவினர் முயற்சி செய்துள்ளனர் எனினும் அந்தக் கைதுகள் இடம்பெறவில்லை.

இவ்வாறாக நாட்டில் இராணுவத்தினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர்கள் மூலமாகவும் நாட்டின் சிறைச்சாலைகளை நிரப்பிக் கொண்டு வருகின்றார்கள். இதனால் புலனாய்வு பலவீனமடைந்து வருகின்றது.

இதன் மூலம் கிடைக்கப்பெற்ற விளைவு என்ன? 18ஆம் திகதி யாழில் பொலிஸாரின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை அனைவரும் அறிந்த விடயமே

அதேபோல் 2009ஆம் காலப்பகுதியில் இந்தியாவிற்கு தப்பிச் சென்ற விடுதலைப்புலிகள் தற்போது மீண்டும் தலைமன்னார் ஊடாக இலங்கைக்குள் வந்து வடக்கில் நிலை கொண்டுள்ளதாக புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவசியம் ஏற்பட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டங்களில் அவர்கள் ஈடுபடத் தயாராகி வருவதாகவும் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் இதற்கு நாமும் தயாராக வேண்டும்.

இதனை ஆரம்பித்து வைத்தவர் சிவாஜிலிங்கமே. வடக்கில் நினைவு தினங்களுக்காக மக்களை ஒன்று கூடச் செய்து விட்டு, அந்தப் பகுதிகளுக்கு ஜனாதிபதியும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

அந்த நினைவு வாரத்தின் இறுதியில் பொலிஸார் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி விட்டு நாம் மீண்டும் தயாராக இருக்கின்றோம் என்ற செய்தி விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை ஏற்படக்காரணம் என்ன? நாட்டில் காணி விடுவிப்பு என்ற பெயரில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றது. அதேபோல் புலனாய்வுத் துறையினர் கைது செய்யப்பட்டு புலனாய்வுப்பிரிவு பலவீனப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறு நாட்டின் புலனாய்வுத் துறையினையும், இராணுவத்தினரையும் பலவீனப்படுத்தி அடுத்த பக்கம் புலிகள் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக செய்து கொடுக்கவும் இந்த பிரினைவாத ஆட்சி வழிவகுத்துக் கொடுக்கின்றது.

இந்த செயற்பாடுகளையே விடுதலைப்புலிகளும், பிரிவினைவாத தமிழர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் எனவும் ஜயன்த சமரவீர தெரிவித்தார்.

-tamilwin.com

TAGS: