எதிரணியில் பாரிசான் கலாச்சாரம், மனம் வருந்துகிறார் ஸைட் இப்ராகிம்

 

Zaidruesபிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி தெரிவித்திருந்த கருத்துகளால் மனம் வெதும்பிக் காணப்படும் ஸைட் இப்ராகிம், எதிரணியினர் பாரிசான் போல் நடந்துகொள்கின்றனர் என்று கூறியுள்ளார்.

அரசியல் சித்தாந்தம் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருப்பதால் மற்றவர்களை, குறிப்பாக மூத்தவர்களை, கடுமையாக விமர்சிப்பதையும் மரியாதையின்றி நடத்துவதையும் நியாயப்படுத்த முடியாது என்று முன்னாள் சட்ட அமைச்சரான ஸைட் இப்ராகிம் கூறுகிறார்.

தமது வலைத்தளத்தில் எதிரணியின் பிரதமர் வேட்பாளர் மிகுந்த ஆய்வு மற்றும் வெளிப்படையான விவாதத்திற்குப் பின்னர் எதிரணியினரால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தாம் குறிப்பிட்டிருந்ததற்கு தம்மை ஓர் இளம் பிகேஆர் தலைவர் நையப்புடைத்திருப்பதாக ஸைட் குறிப்பிட்டார்.

“அது அவசியமற்றது. அது (அம்னோ அமைச்சர்) நஸ்ரி அப்துல் அசிஸ் என்னை “தோல்வியுற்ற அரசியல்வாதி” என்று தாக்கியது போல் இருக்கிறது. நான் நஸ்ரியிடமிருந்து நற்பண்பை எதிர்பார்க்கவில்லை. ஆனால், நான் அதை நிச்சயமாக இந்நாட்டின் எதிர்காலப் பிரதமரிடமிருந்து (ரஃபிஸிடமிருந்து) எதிர்பார்க்கிறேன்”,
என்றார் ஸைட்.

இப்போது டிஎபி உறுப்பினராக இருக்கும் ஸைட்டின் கருத்துப்படி, எதிரணியினர் பிஎன்னிடம் காணப்படும் அதே அரசியல் கலாச்சாரத்தின் அடிச்சுவடுகளைக் கொண்டிருக்கின்றனர்.

“’14ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நாம் அன்வாரை பிரதமராக்க முடியும்’ என்று ஓர் எதிர்கால பிரதமர் கூறுவது அவர் சட்டத்தையும் ஒரு குற்றவாளிக்கு மன்னிப்பு பெறுவதில் சம்பந்தப்பட்டிருக்கும் நடைமுறைகளையும் மதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

“மன்னிப்பு வாரியம், சட்டத்துறைத் தலைவர் மற்றும் பேரரசர் புதிய அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப செயல்படுவார்கள் என்று அவர் நினக்கிறார்.

“மன்னிப்பு வாரிய உறுப்பினர்கள் மறுத்தால் அவர்களுக்கு என்ன ஆகும் என்று நான் வியக்கிறேன். புதிய அரசாங்கம் அழுத்தம் அளிக்குமா அல்லது அன்வாருக்கு இரண்டு வாரத்தில் மன்னிப்பு வழங்காதவர்களை நீக்குவார்களா?”, என்று ஸைட் அவரது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நிலைமை இப்படி இருந்தும், எதிரணித் தலைவர்கள் எவரும் ‘எதிர்காலப் பிரதமரின்” வலியுறுத்தலைத் தட்டிகேட்கவில்லை.

அதிகாரத்தில் இருக்கும் போது கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். இதுதானே எதிரணியின் நிலைப்பாடு என்று ஸைட் மேலும் கூறினார்.