நஸ்ரி: மகாதிர் செய்த தேர்தல் செலவுகளைச் சொல்ல வேண்டும்

 

Nazristopfudgingமகாதிர் அதிகாரத்தில் இருந்த போது தேர்தலுக்காக அவர் செய்த செலவைக் கூற வேண்டும் என்று தாம் விடுத்திருந்த சவாலுக்கு அவர் பதில் அளிக்கத் தவறி விட்டார் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினரான நஸ்ரி அப்துல் அசிஸ் கூறுகிறார்.

“திசை திருப்ப வேண்டாம், ஓடி ஒளிய வேண்டாம், கேள்விக்குப் பதில் மற்றும் நடிக்காதீர்”, என்று நஸ்ரி தொடர்பு கொண்ட போது மலேசியகினியிடம் கூறினார்.

தாம் “பணம் திருடியதாக” நஸ்ரி சுமத்திய குற்றச்சாட்டிற்கு மகாதிர் கடந்த புதன்கிழமை கடுமையான பதில் அளித்தார்.

“அவர் (நஸ்ரி) அக்குற்றச்சாட்டுகளைச் சுமத்தலாம், அது பற்றி போலீஸ் புகார் செய்யலாம். ஆனால், நான் பிரதமராக இருந்த காலத்தில் பெற்ற அனைத்து பரிசுகளையும், 26 மோட்டார் கார்கள் உட்பட, அரசாங்கத்திடம் கொடுத்து விட்டேன்.

“நீங்கள் லங்காவிக்குச் சென்று நான் என்ன திருப்பிக் கொடுத்துள்ளேன் என்பதைப் பார்க்கலாம். அது ரிம1மில்லியனுக்கும் கூடுதலான மதிப்புடையது”, என்று மகாதிர் கோலாலம்பூரில் ஒரு செராமாவில் கூறினார்.

“இது என்னுடைய கேள்விக்கான பதில் இல்லை. நான் பரிசுப் பொருள்கள் பற்றி பேசவில்லை. நான் போலீஸ் புகார் பற்றி பேசவே இல்லை. நான் அவரை திருடன் என்று கூறியதே இல்லை, அது அவராக கூறிக்கொண்டது.

“(மகாதிர் பிரதமராக) ஐந்து தேர்தல்களின் போது இருந்தார். எத்தனை பில்லியன்களை (தேர்தல் நிதியாக) அவர் திரட்டினார், யாரிடமிருந்து, எவ்வளவு செலவு செய்தார், மிச்சம் எவ்வளவு, அது இப்போது எங்கே?

“அவ்வளவுதான்… இந்த ஐந்து கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்ல வேண்டும்…அவர் திரட்டிய அவ்வளவு பணத்திற்கும் அவர் கணக்கு காட்ட வேண்டும் என்று நான் கேட்கிறேன்”, என்று நஸ்ரி கூறினார்.