மஹிந்த காலத்தில் மெளனம்! இப்போது மட்டும் ஏன் தீவிரம்? – இரா.சம்பந்தன் சீற்றம்

tna_colombo_1மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் மௌனிகளாக இருந்தோர், இப்போது தீவிரத்தன்மையுடன் பேசுவது ஏன்? அப்படி தீவிரமாகப் பேசுபவர்களின் பெயர்களை நான் சொல்ல விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று சுமார் ஒன்றரை மணி நேரம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வியாழேந்திரன், எஸ்.சிவமோகன் ஆகியோர் தவிர்ந்த ஏனைய 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில், கேப்பாப்பிலவு மற்றும் முள்ளிக்குளம் காணி விடயங்கள் பேசப்பட்டன . இரண்டு இடங்களிலும் காணி விடுவிப்புக்கு இராணுவத்தினர் நிதி கோருவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பியதும் பேசவுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோரின் உறவினர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. காணாமல் போனோரை வைத்து அரசியல் நடத்த சில தரப்புக்கள் முனைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த மக்கள் இப்படியே வீதியில் இருக்கவும் விடமுடியாது என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் காணாமல்போனோரின் உறவினர்களின் பிரதிநிதிகளை அழைத்து, ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மத்திய அரசு தன்னிச்சையாக அபிவிருத்திநடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. முதலீடு செய்பவர்களுக்கு உரிய ஒழுங்குகளைச்செய்து கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, மத்திய அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை இணைந்து கூட்டுப் பொறிமுறை உருவாக்கி இதனைச் செய்ய வேண்டும் என்றுகூறியிருந்தார். அதற்கு அமைவாக இதனை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தற்போது சிலர், மஹிந்தகாலத்தில் பேசாமல் இருந்து விட்டு தற்போது தீவிரத் தன்மையுடன் பேசுகின்றனர்.அவர்கள் ஏதோ, தாம் மட்டுமே தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் போலக்காட்டிக் கொள்கின்றனர்.

நாடாளுமன்றப் பதிவேட்டை (ஹன்சாட்) எடுத்துப்பாருங்கள். நாங்கள் மஹிந்த காலத்திலேயே எப்படிப் பேசியிருக்கின்றோம் என்பதுதெரியும். இப்போது தீவிரத் தன்மையுடன் பேசுபவர்களின் பெயர்களை இங்கே நான்சொல்ல விரும்பவில்லை. தீவிரத் தன்மையுடன் பேசி எதற்கும் தீர்வைக் காணமுடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

-tamilwin.com

TAGS: