குவான் எங் “புக்கா புவாசா”வில் கலந்துகொள்ளக்கூடாது என்பது குருட்டுப் பிடிவாதம், சென்பெட் கூறுகிறது

 

Notoguanengபினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் புக்கா புவாசா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுவது பிறர் எண்ணங்களையோ நம்பிக்கைகளையோ சிறிதும் பொறுத்துக் கொள்ளாத குருட்டுப் பிடிவாதம் என்று நாளைய நல்ல மலேசியாவுக்கான மையம் (சென்பெட்) கூறுகிறது.

பல்லின மலேசியாவில் இதர இன மற்றும் சமயக் கொண்டாட்டங்களில் பங்கேற்பது ஒரு பாரம்பரியம் என்பதைச் சுட்டிக் காட்டிய சென்பெட், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேலும் வளர்ப்பதற்கு பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மலேசியர்களை மற்றவர்களின் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

“பினாங்கு முதலமைச்சர் “புக்கா புவாசா” நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுவது அவசியமற்றதோடு அது ஓர் இனத்தின் விஞ்சி இருக்கும் நிலையைக் காட்டுகிறது”, என்று சென்பெட்டின் குழு உறுப்பினர் டெரெக் லோ ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை, ஜாரிங்கான் முஸ்லிலின் புலாவ் பினாங் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குவான் எங் “இஸ்லாத்திற்கு எதிரானவர்” என்று குற்றம் சாட்டியதோடு அவர் இஸ்லாத்திற்கு மாறுகிற வரையில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியது.

இஸ்லாத்தின் எதிரியான லிம் புக்கா புவாசாவில் கலந்துகொள்ள வேண்டிய தேவை இல்லை என்று ஜாரிங்கான் குழுமத்தின் தலைவர் முகமட் ஹஃபிஸ் நூர்டின் கூறினார்.