“இந்த கெலிங் சாகப் போகிறான் போல் தெரிகிறது”, போலீஸ் வாட்ஸ்அப்பில் பதிவு!

 

usticeforbalamurganதடுப்புக்காவல் கைதி எஸ். பாலமுருகன் மரணம் மீதான பொதுவிசாரணையில் அவரைப் பற்றிய இன மற்றும் இழிவுபடுத்தும் பதிவுகள் போலீஸ் வாட்ஸ்அப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது வெளியாகியுள்ளது.

இந்த வாட்ஸ்அப் குழுமம் வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையக போலீஸ்காரர்களை உள்ளடக்கியது.

மாவட்ட சிஐடி தலைவர் எஎஸ்பி நோர்சானிஸாம் நோர்டின் அமலாக்க அமைப்புகள் நேர்மை ஆணையத்தின் (இஎஐசி) விசாரணையில் சாட்சியம் அளிக்கும் போது பதிவு செய்யப்பட்ட சில செய்திகள் வாசிக்கப்பட்டன.

பாலமுருகனின் படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு பதிவை எரிக் பால்சன், பாலமுருகன் குடும்பத்தாரின் வழக்குரைஞர், வாசித்தார். அதில் “Keling ini macam mana, boss? Dia macam nak mampus.”,என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த விசாரணையில் 28 ஆவது சாட்சியான நோர்சானிஸாம் இம்மாதிரியான பதிவு சரியல்ல என்றும் அது குறித்து தாம் நடவடிக்கை எடுத்ததாகவும் பதில் அளித்தார்.

முன்னதாக, கோப்ரல் முகமட் லோக்மானுல் ஹாகிம் மொக்தார் அளித்த சாட்சியத்தில் தமக்கு பாலமுருகளை 2011 ஆண்டிலிருந்து தெரியும் என்றும் அவர் தமக்கு தகவல் கொடுப்பவர் என்றும் கூறினார்.

இந்த விசாரணையில் பார் கவுன்சில் பிரதிநிதியான ஆர். சிவராசா, லோக்மானுல் ஹாகிம் வாட்ஸ்அப்பில் பாலமுருகனின் உடல்நிலை பற்றிய பதிவில் அவருக்கு ஒரு போத்தல் பீர் கொடுக்க வேண்டும் என்று கேளியாக குறிப்பிட்டிருந்த தகவலை அவர் வெளியிட்டார்.

“kasi dia Carlsberg, confirm okay”,என்று அந்தப் பதிவில் இருந்தது என்றாரவர்.

இதனை செவிமடுத்த இஎஐசி தலைவர் யாக்கோப் முகமட் சாம், செத்துக் கொண்டிருக்கும் உமது நண்பன் மீது உனக்கு அனுதாபம் இல்லையா என்று லோக்மானுலிடம் கேட்டார்.

“ஆம்…ஆனால், எனக்குத் தெரிந்தவரையில், அவர் எப்போதும் குடிப்பார்”, என்று அந்த போலீஸ்காரர் பதில் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, பாலமுருகனின் சகோதரர் தம்மைத் தொடர்பு கொண்டது முதல் தமக்குத் தெரிந்த மற்றும் சம்பந்தப்பட்ட பலவற்றை லோக்மானுல் கூறினார்.

லோமானுல் 26 ஆவது சாட்சியாவார். மொத்தம் 56 சாட்சிகள் சாட்டியமளிக்கவிருக்கின்றனர்.

பாலமுருகன் வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் தடுப்புக்காவல் பகுதியில் பெப்ரவரி 8 இல் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

விசாரணை நாளை தொடர்கிறது.