ஒரு தந்தைக்கு 472 மகள்கள்

அகமதாபாத்தை சேர்ந்த மகேஷ் சவானிக்கு 472 மகள்களிடம் இருந்து தந்தையர் வாழ்த்துக்கள் குவிந்துள்ளன. ஆம், தந்தையை இழந்த அந்தப் பெண்களுக்கு தந்தையாய் இருந்து திருமணம் நடத்தி வைத்தவர் மகேஷ் சவானி.

அதனால் ஒவ்வொரு தந்தையர் தினத்திற்கும் சவானிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. அன்பு மழையிலும், பரிசு மழையிலும் நனைகிறார் இந்த அன்புத்தந்தை.

வைர வியாபாரம், ரியல்எஸ்டேட் தொழில் ஆகியவைதான் மகேஷ் சவானியின் பிரதான தொழில்கள். சில பள்ளிகளையும் பரிபாலனம் செய்கிறார். 48 வயதானவர் சவானி.

தொழில் அதிபரான அவரது அண்ணன் சிறிது காலத்திற்கு முன்பு இறந்துவிட்டார். அவரது 2 மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பு சவானிக்கு ஏற்பட்டது.

திருமண சமயத்தில் அண்ணனின் மனைவி சந்தித்த நெருக்கடியை அவரும் அருகில் இருந்து அறிந்து கொண்டார். வசதி வாய்ப்பு நிறைந்த நாமே, மகள்களின் திருமணத்தை எதிர்கொள்ள இவ்வளவு சிரமப்பட நேரிடும்போது, தந்தையை இழந்து, வசதி வாய்ப்பின்றி தவிக்கும் இளம் பெண்கள் எத்தனைபேர் திருமண பந்தம் கூடாமல் தவிக்கிறார்களோ? என்ற எண்ணம் சவானியின் மனதில் நெருடலை ஏற்படுத்தியது.

உடனே தந்தையை இழந்த பெண்கள் மீது தனிக்கவனம் செலுத்துவது என்று முடிவு செய்தார்.

அதுபோன்ற பெண்களுக்கு ஆதரவு தந்து தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைப்பதை தனது தொண்டாக கருதி களத்தில் இறங்கினார். 2008-ம் ஆண்டு முதல் ஏராளமான ஆதரவற்ற பெண்களுக்கு திருமணம் நடத்தி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்து வருகிறார். இதுவரை இவரால் திருமண பந்தம் பெற்றவர்கள் 472 பேர். மேலும் பலருக்கு திருமண உதவித் தொகை வழங்கி உள்ளார்.

சாதி, மதம் பார்க்காமல் ஆதரவற்றோருக்கு அவர் உதவி வருகிறார். அதுபற்றி அவரிடம் கேட்டால் “கணவனை இழந்த ஒரு தாய் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதை நான் அறிவேன்” என்கிறார் சவானி.

உரியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த அத்தனை ராணுவ வீரர்களின் குழந்தைகள் படிப்புச் செலவையும் ஏற்பதாக அறிவித்தார். 17 குழந்தைகள் அவரால் கல்வியை இடைவிடாமல் தொடர்கின்றனர்.

மற்றொரு தொண்டாக, உடல் தானம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் சவானி. இதுவரை 251 பேர் உடல்தானம் செய்ய சம்மதம் தெரிவிக்க உதவியாக இருந்துள்ளார்.

அவரது தொண்டுகளைப் பாராட்டி பல சமூக அமைப்புகள் விருது வழங்கி கவுரவித்துள்ளன.

-lankasri.com

TAGS: