இனிமேல் டிஒஜே பற்றி அறிக்கைகள் இல்லை, நஜிப் கூறுகிறார்

 

Nomoreondojnajibஅமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தாக்கல் செய்துள்ள மிக அண்மைய சிவில் பறிமுதல் செய்தல் வழக்கு பற்றி தாம் அறிக்கைகள் ஏதும் விடப்போவதில்லை என்று பிரதமர் நஜிப் ரசாக் கூறுகிறார்.

டிஒஜே தாக்கல் செய்துள்ள அண்மைய வழக்கை தற்காப்பு அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன் கடுமையாகச் சாடியுள்ளது பற்றி இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கருத்துரைக்கும்படி நஜிப் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

பல அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. தாமும் பிரதமர் அலுவலகத்தின் வழி அவ்விவகாரம் குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டதாக நஜிப் கூறினார்.

எப்போது டிஒஜே மீது வழக்கு தொடரப் போகிறீர் என்று நஜிப்பிடம் கேட்டதற்கு, அப்படி செய்யப் போவது யார் என்று எதிர்வினையாற்றினார்.

“யார்? யார் வழக்கு தொடரப் போவது?

“இனிமேல் அறிக்கைகள் இல்லை (டிஒஜே பற்றி)”, என்று நஜிப் மேலும் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை, யாரும் எதிர்பாராத அதிர்ச்சி அளிக்கும் குண்டை டிஒஜே போட்டது. 1எம்டிபி பணத்தைத் தவறாகப் பயன்படுத்தி சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் சொத்துகளைக் கைப்பற்றுவதற்காக அது மூன்றாவது சிவில் வழக்கை தாக்கல் செய்தது.

அந்த வழக்கில் டிஒஜே குறிப்பிட்டுள்ள பெயர்களில் பினாங்கில் பிறந்த பெரும் தொழிலதிபர் லோ டெக் ஜோ மற்றும் நஜிப்பின் வளர்ப்பு மகன் ரிஸா அசிஸ் ஆகியோரும் அடங்குவர்.

அந்த வழக்கில் “மலேசியன் அதிகாரி 1” மற்றும் அவரது துணைவியார் ஆகியோரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

டிஒஜே தாக்கல் செய்துள்ள 251 பக்கங்களைக் கொண்ட வழக்குப் பத்திரத்தில், யுஎஸ்$620 மில்லியனை எம்ஒ1 அதை அளித்த நன்கொடையாளரிடமே திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும் என்றும் ஆனால் மாறாக, அது லோவுக்கு மாற்றி விடப்பட்டது. அவர் அப்பணத்தை பயன்படுத்தி எம்ஒ1 இன் துணைவியாருக்கு யுஎஸ்$27.3 மில்லியன் மதிப்புள்ள இளஞ்சிவப்பு வைர நெக்லஸை வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், பிரதமர்துறையின் அமைச்சரான அப்துல் ரஹ்மான் டாலான் எம்ஒ1 என்பது நஜிப் என்று அடையாளம் காட்டினார். ஆனால், அவர் பெயர் குறிப்பிடப்படவில்லை ஏனென்றால் அவர் அந்த விசாரணைக்கு உட்பட்டவர் அல்ல என்பதை டாலான் வலியுறுத்தினார்.