ராமேஸ்வர மீனவர்களை அடித்து துன்புறுத்திய இலங்கை கடற்படையினர்

tamilnadu_fishermen_001கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர், மீன்களை பிடிங்கி இரும்பு கம்பியால் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு கடலில் மீன்பிடிப்பதற்கான தடை முடிந்து கடந்த ஒரு வாரமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.

அதன்படி நேற்று ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 600 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்.

இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது 4 சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை பார்த்து இது இலங்கை கடற்பகுதி, இங்கு வந்து மீன் பிடிக்கக்கூடாது என எச்சரித்தனர்.

மேலும் கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அதில் இருந்த மீன்களை பறித்துக்கொண்டனர். தொடர்ந்து மீன்பிடி சாதனங்களையும, வலைகளையும் சேதப்படுத்திய அவர்கள், 20-க்கும் மேற்பட்ட மீனவர்களை படகுகளிலேயே கட்டி வைத்து இரும்புக்கம்பியால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

ஆத்திரம் தீர அடித்து உதைத்த இலங்கை கடற்படையினர் 3 மணி நேரத்திற்கு பின்னர் மீனவர்களை விடுவித்தனர். உயிர் பிழைத்தால் போதும் என்று கருதிய அவர்கள் அவசசரம், அவசரமாக படகுகளில் கரை திரும்பினர்.

தாக்குதலில் காயம் அடைந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் பழனிக்குமார் கூறுகையில், நாங்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி எங்களை சரமாரியாக தாக்கினர். இனிமேல் இப்பகுதியில் மீன் பிடிக்க வந்தால் சிறைபிடிப்போம் என்று கூறினர் என்றார்.

-lankasri.com

TAGS: