நஜிப் அன்னிய செலாவணி இழப்பு குறித்து இவ்வளவு காலம் மெளனமாக இருந்தது ஏன்? முகைதின் கேள்வி

muhஅன்னிய  செலாவணி(ஃபோரெக்ஸ்)  இழப்பு  குறித்து  இப்போது   விசாரிக்க    முயற்சி   மேற்கொள்ளப்படுவது   குறித்துக்   கருத்துரைத்த   முகைதின்   யாசின்,   இவ்விவகாரம்   தொடர்பில்    பிரதமர்     நஜிப்   அப்துல்    ரசாக்    இருபதாண்டுகளுக்குமேல்   மெளனமாக   இருந்தது    ஏன்    என்று   வினவுகிறார்.

நஜிப்   அவ்விவகாரத்தில்   நடந்தது   என்னவென்பதை    அறிய   விரும்பியிருந்தால்    அவர்   மகாதிர்   முகம்மட்    அமைச்சரவையில்   இருந்தபோதே   அது  குறித்துக்   கேட்டிருக்க   வேண்டும்    என  பார்டி   பிரிபூமி  பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)   தலைவர்    கூறினார்.

“அமைச்சரவையில்    இல்லை  என்றால்   அம்னோ   உச்சமன்றக்   கூட்டத்திலாவது     நஜிப்   அவ்விவகாரத்தை     எழுப்பியிருக்கலாம்”,  என  முகைதின்   ஓர்    அறிக்கையில்    கூறினார்.

மகாதிர்  1எம்டிபி   விவகாரம்  தொடர்பில்    நஜிப்பைக்  குறைகூறத்   தொடங்கிய  பின்னர்தான்    ஃபோரெக்ஸ்   ஊழல்   மீது   அரச  விசாரணை  ஆணையம்   (ஆர்சிஐ)   அமைக்க  முடிவு   செய்யப்பட்டிருப்பதை  முகைதின்   சுட்டிக்காட்டினார்.

“இந்த   (ஃபோரெக்ஸ்)   விவகாரம்   குறித்துத்தான்    முன்பே    விசாரிக்கப்பட்டு    சம்பந்தப்பட்டவர்களும்    பணிவிலகிச்   சென்று  விட்டார்களே.  மனத்தில்   என்ன   வஞ்சத்தை     வைத்துக்கொண்டு  நஜிப்   இந்த  ஆர்சிஐ-யை   அமைத்திருக்கிறார்?”,  என்றவர்   வினவினார்.

1எம்டிபி  ஊழலிலிருந்து   கவனத்தைத்   திருப்பவே   ஃபோரெக்ஸ்   மீது   ஆர்சிஐ   அமைக்கப்பட்டிருப்பதாக   பெர்சத்து   தலைவர்  உறுதியாக   நம்புகிறார்.