ஆட்சியைப் பிடித்த 100 நாள்களுக்குள் ஜிஎஸ்டி அகற்றப்படும், ஹரப்பான் சூளுரைக்கிறது

 

Gstoutin100daysபுத்ரா ஜெயாவைக் கைப்பற்றிய முதல் 100 நாள்களுக்குள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பட்டியலை ஹரப்பான் இன்று வெளியிட்டது.

ஹரப்பான் கூட்டணியின் கூட்டறிக்கையை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதன் அவைத்தலைவர் மகாதிர் முகமட் வாசித்தார். அத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளவற்றில் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் இரத்து செய்யப்படுவது ஒன்றாகும்.

ஹரப்பான் செயல்படுத்தவிருக்கும் திட்டங்களின் பட்டியல்:

– பெட்ரோல் விலையை நிலைப்படுத்துதல்
– மக்களின் சுமைகளைக் குறைக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்துதல்
– முக்கியமான அமைப்புகளை முழுமையாக சீர்திருத்துவதற்கான செயல்முறைகளைத் தொடங்குதல்
– ஊழலை வேர் அறுத்தல்
– 1எம்டிபி ஊழலை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைத்தல்
– பெல்டா மறுசீரமைப்பு செய்தல்.

இதனுடன், நஜிப் அப்துல் ரசாக்கின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதும் அதன் ஈடுபாடுகளில் அடங்கும் என்றாரவர்.

இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் பெட்டாலிங் ஜெயா பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் செய்யப்பட்டது.

 

பிரதமர் பதவிக்கு உச்ச வரம்பு
ஹரப்பான் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான டிஎபி, பிகேஆர், அமனா நெகாரா மற்றும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா ஆகியவை பிரதமர் பதவிக்கு இரண்டு தவணை உச்ச வரம்பை அமல்படுத்தும்.

மக்களின் நலன்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் தற்போதைய அரசாங்கத்தின் சட்ட மீறல்கள் இரத்து செய்யப்படும் அல்லது திருத்தப்படும் என்று கூறினர்.

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்து அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடவும் அவர்கள் ஒப்புக்கொண்டதோடு அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான சட்ட திருத்தம் செய்யப்படும் என்றும் கூறினர்.

சின்னம் முடிவு செய்யப்பட்டது

ஹரப்பானின் சின்னம் மற்றும் அதன் கட்டமைப்பு ஆகியவை குறித்தும் நீண்டகால பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முடிவு செய்யப்பட்டது.

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் ஹரப்பான் கூட்டணையின் நடப்பில் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதே வேளையில், பிகேஆர் தலைவர் வான் அசிஸா வான் இஸ்மாயில் ஹரப்பான் கூட்டணி தலைவராக நியமிக்கப்பட்டார்.