புதிய பிரபஞ்சத் தொகுப்பைக் கண்டுபிடித்து அதற்கு சரஸ்வதி என்று பெயரிட்ட இந்திய விஞ்ஞானிகள்

saraswati-galaxy

சென்னை: பிரபஞ்சத்தின் பெரும் தொகுப்பு (supercluster of galaxies) ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிபடித்துள்ளனர். இதற்கு சரஸ்வதி என பெயரிடப்பட்டுள்ளது.

சரஸ்வதி எனும் இந்த பெரும் தொகுப்பு, பிரபஞ்சம் தோன்றிய பெரும் வெடிப்புக்கு பின்னர் பத்து பில்லியன் ஆண்டுகளிலேயே தோன்றியுள்ளது. பிக்பேங் எனப்படும் பெரு வெடிப்பு தியேரிக்கு இது வலு சேர்ப்பதாக உள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பூமியிலிருந்து நாலு பில்லியன் ஒளியாண்டு தொலைவில் 20 மில்லியன் பில்லியன் சூரியனின் நிறை கொண்ட 650 மில்லியன் ஒளியாண்டு அளவில் பெரிதானது இந்த பிரம்மாண்ட தொகுப்பில் 10000 கேலக்ஸிகளுக்கும் மேல் இருக்கும் எனவும் இவை 42 கேலக்ஸி தொகுப்புகளாக பிரிவுபட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

கேலக்ஸி தொகுப்பு

பிரபஞ்சத்தில் சூரியனைப் போன்ற பல கோடிக்கணக்கான விண்மீன்கள் உள்ளன. இவை தமக்குள்ள ஈர்ப்பு விசையால் ஒன்றிணைந்து கேலக்ஸி என்ற அமைப்பை உருவாக்குகின்றன. இதுபோன்ற பல கேலக்ஸிகள் ஒன்று சேர்ந்து கேலக்ஸி பெரும் தொகுப்பு அமைகிறது.

பெரும் தொகுப்பு

இதற்கு முன்பு, நூறு மில்லியன் ஒளியாண்டு அளவு பெரிதாக இருக்கும் பல நூறு கேலக்ஸி தொகுப்புகளை விஞ்ஞானிகள் இனம் கண்டுள்ளனர். ஆனால் ஐநூறு மில்லியன் ஒளியாண்டுக்கும் கூடுதல் அளவுள்ள பெரும் தொகுப்புகள் ஒருசிலதான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இப்போதுதான் பெரும் தொகுப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சரஸ்வதி

இந்த தொகுப்புக்கு சரஸ்வதி என இந்திய விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளதை மதம் சார்ந்ததாக சில நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த பெயர் சூட்டப்பட வேறு ஒரு காரணம் உள்ளதாம்.

நதி இணைப்பு

சரஸ்வதி வடமொழியில் பல நதிகளின் இணைப்பு எனவும் பொருள்படும். பத்தாயிரம் கேலக்ஸிகள் கொண்ட நாற்பத்தி இரண்டு கேலக்ஸி தொகுப்புகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உருவாகியுள்ள இந்த கேலக்ஸிக்கு இதன் காரணமாக சரஸ்வதி என பெயரிட்டுள்ளோம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கிளை நதிகள் ஒன்றுடன் ஒன்று கலந்து பெருநதி உருவாவது போலதான் இந்த பெரும் தொகுப்பு காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: