ஐ.எஸ் எதிர்காலம் என்ன?

இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொண்ட குழு, தனது கேலிஃபேட்டை அறிவித்த வடக்கு ஈராக்கில் உள்ள மொசூலை மீட்க நடத்தப்பட்ட தாக்குதல், அந்த நகரம் “விடுவிக்கப்பட்டதாக“ இராக் அரசு அறிவித்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது.

இதே கதி ஐ.எஸ். குழு தங்கள் தலைநகராக அறிவித்துக் கொண்டுள்ள சிரியாவின் ராக்காவுக்கும் ஏற்படலாம். இந்தப் பின்னடைவுகளுக்குப் பின், அந்த குழு எப்படி சமாளிக்கிறது?

கெரில்லாப் போரும் உலகை வெல்லுதலும்: பிராந்தியத்தை இழந்த பிறகு ஐ.எஸ். எப்படி மாறுகிறது?

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என தங்களை அழைத்துக் கொள்ளும் குழு – ( இது ஐஎஸ்ஐஎஸ் என்றும் அழைக்கப்படுகிறது) – வடக்கு ஈராக்கில் மொசூலில் “கலிஃபேட்” பிரகடனப்படுத்தி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நகரத்தை விடுவித்து விட்டதாக ஈராக்கிய அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே, அந்த குழுவால் கலிபா ஆட்சி நடைபெறுவதாக அறிவித்துக் கொள்ளப்பட்ட வடக்கு சிரியாவின் ராக்கா, அமெரிக்க ஆதரவுப் படைகளின் தாக்குதலை அடுத்து, மீண்டும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும் நிலையில் உள்ளது.

அதன் முடிவாக, சிரியா மற்றும் ஈராக்கில் பெரிய அளவில் நிலப்பரப்பைக் கட்டுக்குள் வைத்திருந்த இஸ்லாமிய வாதப் போராளிகள், தங்களின் ஆள்சேர்ப்பு மற்றும் தங்கள் கோட்டைகளை தக்க வைத்திருப்பதிலும் கடுமையாகச் சரிந்து வருகின்றனர்.

ஆனால், கேலிஃபேட்டின் முடிவு நெருங்குவதை இது குறிக்குமானால், அதுவே, ஐ.எஸ் என தங்களை அழைத்துக் கொண்ட அந்தக் குழுவின் இறுதிக் காலம் நெருங்குவதையும் குறிக்கிறதா?

துரதிருஷ்டவசமாக இதற்கான பதில் ‘நிச்சயமாக இல்லை’ என்பதுதான், என்று இங்கிலாந்தில் உள்ள ப்ராட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அமைதிக் கல்விகளுக்கான துறையின் பேராசிரியரும் “ஒழுங்கற்ற போர்: ஐஎஸ்ஐஎஸ் மற்றும் விளிம்புகளில் இருந்து வரும் புதிய அச்சுறுத்தல்” என்ற நூல் ஆசிரியருமான பால் ரோஜர்ஸ் கூறுகிறார்.

ஈராக் மற்றும் சிரியாவில் நீண்ட கால கிளர்ச்சியில் ஈடுபட ஐ.எஸ். குழு தன்னைத்தானே மாற்றிக் கொண்டு வருவதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருவதாகவும் அது சர்வதேச இயக்கமாக வளர்ந்து வருவதாகவும் அவர் பிபிசியிடம் கூறிகிறார்.

மற்ற நிபுணர்களைப் போல, ஜிகாதிகள் குழுவை வீழ்த்தி விட்டதாக அவசரப்பட்டு அறிவித்துக் கொள்வதை ரோஜர்ஸும் எச்சரிக்கிறார்.

முதலாவதாக, மொசூலில் நடந்த போர், எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் இழுத்தது, மேலும் எதிர்பார்த்ததை விட கடுமையாகவும் இருந்தது. இந்த சண்டையின்போது, தங்களது தாக்குப்பிடிக்கும் திறனையும், செயல் தந்திரத்தை மாற்றக் கூடிய தன்மையையும் அந்த குழு வெளிபடுத்தியுள்ளது.

மற்றும், உலகம் முழுவதும் தனக்கான ஆதரவாளர்களை சேர்க்கவும், தாக்குதல்களை நடத்தவும் தங்களுக்கு திறன் உள்ளது என்பதை அக்குழு தெளிவுபடுத்தி விட்டது.

நிலப்பரப்பு இல்லாமல்

2014-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், மொசூலை தனது கட்டுக்குள் ஐ.எஸ் கொண்டு வந்தது. அடுத்த சில வாரங்களுக்குள், இராக் மற்றும் சிராயாவில் ஐக்கிய ராஜ்ஜியத்தின் அளவு (242,000 சதுர கிலோ மீட்டர்) பகுதியை அந்தக் குழு கைப்பற்றியது.

அதன் பின்னர், சர்வதேச கூட்டணியின் உதவியுடன் இரு நாடுகளிலும் ஐ.எஸ். நிலைகளில் குண்டுமழை பொழியும் பிரசாரத்தை அமெரிக்கா முன்னெடுத்தது. ஜிகாதிகளின் ஆளுகை பகுதி கடுமையாக சரிந்தது.

ஆனால், இந்த கேலிஃபேட் உடைந்து நொறுங்கும் நிலையில் இருப்பதாகத் தோன்றும் நிலையில் ஐ.எஸ். என்னவாகும் என்பதே கேள்வி?

மூன்று சூழ்நிலைகள் ஏற்கனவே உருவாகி வருவதைத் தன்னால் முன்கூட்டியே பார்க்க முடிவதாக பால் ரோஜர்ஸ் கூறுகிறார்.

“இராக் மற்றும் சிரியாவில் கெரில்லா போர்முறையை அக்குழு கையிலெடுக்கும் மற்றும் நிலப்பகுதியைக் கையிலெடுக்காமல் தனது போரைத் தொடரும்” என்று அவர் விளக்குகிறார்.

“தனது செய்தியை உலகுக்கு பரப்பும் செயலில் அக்குழு ஈடுபடும், மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் பிலிப்பைன்ஸ் மற்றும் வடக்கு ஆஃப்ரிக்காவில் இந்த முயற்சிக்கு ஏற்கனவே வெற்றி கிடைத்துள்ளது,” என்கிறார் அவர்.

“மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம், பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிற எதிரி இலக்கை நோக்கி அக்குழு போரை முன்னெடுத்துச்செல்லும் நோக்கத்தைத் தொடரும்” , என்கிறார் அவர்.

28 ஜூன் ஐஎஸ் வெளியிட்ட இணைய விடியோவில், கலிபாவை இழந்து விட்டதாகக் கூறுவதை மறுத்தது. மற்றும் “அது உண்மையாக இருந்தாலும் கூட, ஆட்சிப் பகுதியை இழப்பது தோல்வி என அர்த்தமாகாது” என்று கூறியது.

“இழந்த ஒவ்வொரு நிலப் பகுதியையும் மீண்டும் ஐஎஸ் கோரும்” என்று கூறிய அந்த அறிக்கையில், குழுவின் ஆதரவாளர்கள், “தங்களின் பணியை செய்ய வேண்டும்” மற்றும் “தாங்கள் வசிக்கும் நாடுகளில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளை நிராகரிக்க வேண்டும்” என்று ஐஎஸ் கூறியது.

போராளிகள்

இராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் நிலையில் சுமார் 40 ஆயிரம் வெளிநாட்டு ஆயுததாரிகள் உள்ளதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஜிகாதி குழுவின் கலிபா வீழ்ந்தவுடன் அவர்கள் என்ன ஆவார்கள்?

“ஒரு ஏற்றுக் கொள்ளத்தக்க உண்மையை கவனத்தில் கொள்ளலாம்: இந்த ஆயிரக்கணக்கான போராளிகள் கலைந்து போக மாட்டார்கள்” என்று நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் எழுதியுள்ளார் “பயங்கரவாதத்தின் உடற்கூறு: பின் லேடன் மரணம் முதல் இஸ்லாமிய அரசின் தோற்றம்வரை” எனும் நூலின் ஆசிரியர் அலி செளஃபான்.

மாறாக, தங்களுக்கு முந்தைய தலைமுறை ஜிகாதிகளைப் போலவே, மாற்று வழி வன்முறைகளை அவர்கள் தேடுவார்கள்,” என்றார் அவர்.

அவர்களில் பெரும்பாலானோர் மற்ற ஜிகாதி குழுக்களில் சேருவர் என்று பால் ரோஜர்ஸ் நினைக்கிறார்: “தென்கிழக்கு ஆசியா, காகசஸ் மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் பரந்த அளவில் இஸ்லாமிய துணை ஆயுதக் குழுக்கள் உள்ளன.”என்கிறார் ரோஜர்ஸ்.

இதை லண்டனில் உள்ள ஆய்வு மையமான ராயல் ஐக்கிய சேவைகள் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கேரின் வோன் ஹிப்பரும் ஏற்றுக் கொள்கிறார்.

“ஐஎஸ்ஐஎஸ் அல்லது ஜிகாதிகளின் முடிவாக இது இருக்க வேண்டிய அவசியமில்லை” என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.

“ரகசியமாக அவர்கள் (ஜிகாதிகள்) இயங்கியவாறு பிரச்சனைகள் அளிக்கத் தொடங்குவர்.

இராக்கில் நிலையான ஆட்சியின்றி கடந்த பல ஆண்டுகளாக காணப்பட்ட ஸ்திரத்தன்மையின்மை, சிரியாவில் நிலவும் உள்நாட்டுப் போர் போன்றவையால் அவர்களால் அவ்வாறு செயல்பட முடியும்,”என்கிறார் அவர்.

இணைக் குழுக்கள்

மொசூல் மற்றும் ரக்காவில் ஐஎஸ் குழுவுக்கு எதிரான போர்கள் வேண்டுமானால் முடிவுக்கு வரலாம், ஆனால், அந்த பகுதிகளில் ஆண்டுக்கணக்கில் ஸ்திரத்தன்மையற்ற நிலை நிலவப் போகிறது என்பதைத்தான் எல்லாமே காட்டுகிறது.

கிழக்கு லிபியாவைச் சேர்ந்த ஒரு அமைப்பு, இஸ்லாமிய அரசு குழுவின் வழியைப் பின்பற்றும் முக்கிய அமைப்பாகப் போவது கண்கூடு என்று அலி செளஃபான் நம்புகிறார்.

“இந்த குழுவில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர், மற்றும் பிரிட்டனின் மான்செஸ்டர் அரங்கத்தில் மே 22-ஆம் தேதி தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரி சல்மான் அபேடிக்கு பயிற்சி அளித்தது அக்குழுவாக இருக்கலாம்” என்று செளஃபான் கூறுகிறார்.

பெரும்பாலும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய கூட்டுப் படைகளும் தற்போது வேறெங்கிலும், ஜிகாதி குழுவுக்கு எதிரான போராட்டத்தை தொடரத்தான் வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“சுருக்கமாக சொல்வதென்றால், இதுவரை என்ன செய்து வந்ததோ அதையே தொடர்ந்து மேற்கு நாடுகள் செய்ய வேண்டும்” என பிபிசியிடம் கூறுகிறார் பிராட்ஃபோர்ட் பல்கலைக்கழக நிபுணர் பால் ரோஜர்ஸ்.

“ராணுவ முயற்சிகளையும், ராணுவத்துக்கு கூடுதல் சுதந்திரத்தையும் (ஒபாமா ஆட்சியில் இருந்ததை விட) டொனால்ட் டிரம்ப் அரசு அதிகரித்து வருவதற்கான சமிக்ஞை தெரிகிறது,” என அவர் மேலும் கூறுகிறார்.

ஆனால் இந்த உத்தி, தேவைப்படும் முடிவைத் தரவில்லை என்று அந்த நிபுணர் தெரிவித்தார்.

அந்த பிராந்தியத்தில் அமெரிக்கா போர் தொடங்கி ஏறத்தாழ 17 ஆண்டுகளாகி விட்டது. மேற்கு ஐரோப்பாவில் பாதுகாப்பற்ற நிலை நிலவுவதாக 17 ஆண்டுகளுக்கு முன்பு நிலவத் தொடங்கிய கருத்துணர்வு , தற்போதும் கூட குறையவில்லை.

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவிற்கு மட்டுமின்றி எல்லா இடங்களிலும் மிகப் பெரிய அளவிலான சமூக பிரச்சனைகள் மற்றும் ஒதுக்கப்படும் நிலை உள்ளது,” என்கிறார் அவர்.

“அடுத்து வரும் ஆண்டுகளில் பாதுகாப்பு விவகாரத்தில் வித்தியாசமான அணுகுமுறையை நாம் மேற்கொள்ளாதவரை, பிரச்சனைகள் மேலும் மோசமடையவே செய்யும்,” என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.

“நாம் மாற்றத்துக்கான மறுசிந்தனை செய்து, வித்தியாசமான அணுகுமுறையை கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டும். ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்த மாற்றங்களுக்காக விவாதிப்பது எளிதானதல்ல,” என்கிறார் அவர்.

– BBC – Tamil