செருப்பு வாங்க பணமில்லாமல் இருந்த சதாம் ஹுசைன்: வெளிவராத உண்மைகள்

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் கடும் ஏழ்மை நிலையில் இருந்து நாட்டின் உன்னத பதவிக்கு வந்தவர்களில் முக்கியமானவர்.

ஈராக்கின் திக்ரித்தில் குடும்பத்துடன் குடியிருந்த சதாம் ஹுசைன், செருப்பு வாங்கக் கூட பணமில்லாமல் ஏழ்மை நிலையில் இருந்துள்ளார்.

பின்னாளில் சொந்தமாக 20க்கும் மேற்பட்ட மாளிகைகளை கட்டுவதற்கு அதுவே அவருக்கு உந்துசக்தியாகவும் இருந்துள்ளது என, சதாமின் அரசியல் நகர்வுகள் குறித்து புத்தம் எழுதிய சையத் அபூரிஷ் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து வசதிகளுடனும் கூடிய அரண்மனைகள் பல இருந்தும் சதாம் அங்கு சில மணி நேரம் மட்டுமே தூங்கியுள்ளதாக அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஈராக் மக்கள் தண்ணீரை விலைமதிப்பற்ற பொருளாக கருதி வந்ததால், சதாம் கட்டி எழுப்பிய அனைத்து அரண்மனையிலும் நீரூற்றுகளும், நீச்சல் குளங்களும் இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

நீச்சல் குளங்களில் நச்சு கலக்கப்படலாம் என்ற சந்தேகம் இருந்ததால் தொடர்ந்து சோதிக்கப்பட்டு, கண்காணிக்கபட்டும் வந்துள்ளன.

சதாம் ஹுசைனின் ஆட்சிக்கு எதிரான பலரும் தேலியம் நச்சு கொண்டு கொல்லப்பட்டதால் தனக்கும் யாராவது நச்சு கொடுக்கலாம் என்ற பயம் அவருக்கு எப்போதுமே இருந்ததே காரணமாக கூறப்படுகிறது.

உணவுப்பிரியரான சதாம் வாரம் இருமுறை மீன், நண்டு, இறால் என பலவிதமான இறைச்சி வகைகளை விருந்தாக்கியுள்ளார்.

மட்டுமின்றி சதாமின் 20 அரண்மனைகளிலும், அவர் இல்லாத நேரத்திலும் பணியாட்கள் எப்போதும் இருப்பதனால், அனைத்து பணியாளர்களுக்கும் மூன்று வேளையும் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

திருமணமான பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வது சதாம் ஹுசைனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்து வந்துள்ளது.

இதுபோன்ற தனிப்பட்ட விருப்பங்களை அவரது பாதுகாவலர் காமேல் ஹனா ஜென்ஜென் செய்துக் கொடுத்துள்ளார். இருபது ஆண்டுகளாக சதாமின் பாதுகாவலராக இருந்தவர் காமேல் ஹனா, சதாமின் சமையல்காரரின் மகன்.

காமேல் ஹனாவுக்கு இருந்த பல வேலைகளில் ஒன்று, சதாமுக்கு கொடுக்கப்படும் உணவுகளின் நச்சு கலக்காமல் இருப்பது குறித்து சோதித்து உறுதி செய்வது.

உணவில் யார் நச்சு கலந்தாலும் தமது சமையற்காரர் அதுபோன்று செய்ய துணியமாட்டார் என சதாம் உறுதியாக நம்பியிருந்தார். காரணம், சதாமின் உணவுகளை முதலில் சாப்பிடுவது சமையல்காரரின் மகனான காமேல் ஹனா தான்.

-lankasri.com