இனவெறி இருளைக் கிழித்த ஜனநாயக ஒளிக்கற்றை!

mandela2“அனைவரும் செழிப்பும் சமத்துவமும் கொண்ட ஒரு சனநாயக சமூகமாக வாழ வேண்டும் என்பது எனது கருத்தியல், அதற்காகவே வாழ விரும்புகிறேன். இல்லையேல் அதற்காகவே சாகவும் விரும்புகிறேன்.” என்று குற்றவாளி கூண்டிலிருந்து வாக்கு மூலம் கொடுத்தவர் மண்டேலா.

தன்னை மெல்ல மெல்ல அழித்துக் கொண்டு உலகுக்கு ஒளிவீசும் தன்மை கொண்டது மெழுகுவர்த்தி; ஆனால், மக்கள் ஜனநாயக உலகில் ஒரு கருப்பு மெழுகுவர்த்தி எரியாமலேயே ஒளிர்ந்தது. அது, 1918-ஆம்  ஆண்டில் ஜூலைத் திங்கள் 18-ஆம் நாளில் தோன்றியது; ஆம், தியாகத்தின் திருவுரு; ஜனநாயக மாண்பின் மறு வடிவம் நெல்சன் மண்டேலாவிற்கு இன்று பிறந்த நாள்!

“கால் நூற்றாண்டுக்கும் மேலாக நான் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது ஒரு பொருட்டல்ல; இனி, இந்த மண்ணில் இனவெறி ஆட்சியைத்தான் தனிமைப்படுத்த வேண்டும். அதற்கு, பன்னாட்டு சமுதாயம் பங்களிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்” என்று 27 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் விடுதலையான நெல்சன் மண்டேலா, உலக மக்கள் மன்றத்தைப் பார்த்துப் பேசிய உரை, வரலாற்றுச் சிறப்புமிக்கது.

Mandellaஇருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் ஏறக்குறைய உலகம் முழுவதும் ஜனநாயக மறுமலர்ச்சி மலர்ந்த பின்னும், ஆங்காங்கே மக்கள் தங்களின் உரிமை வாழ்விற்காக போராடும்  நிலை நிலவியது. அப்படி, தாங்கள் தோன்றிய இனத்தின் உரிமைக்காகக் குரல் எழுப்பி போராடியத் தலைவர்களாக புத்தாயிரத்தாம் ஆண்டு பூத்தபொழுது, மூன்று தலைவர்கள் உலக அளவில் திகழ்ந்தனர்.

நம் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், நெல்சன் மண்டேலா, பாலஸ்தீனப் போராளி யாசர் அராஃபாத் ஆகிய மூவர்தான் அந்தத் தலைவர்கள். இவர்களில் 95 அகவைவரை போராட்ட வாழ்வை மேற்கொண்டு அதில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியை இடைவிடாமல் சிறைக் கொட்டடியில் கழித்த தியாக தீபம் நெல்சன் மண்டேலா ஆவார்.

தென்னாப்பிரிக்க மண்டலத்தில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் இவர்தான். அதற்கு முன் ஆங்கிலேயர்களின் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக விளங்கிய இத்தலைவர், தொடக்கத்தில் ஈழத் தலைவரைப்போல அறப்போர் வழிமுறையில் நம்பிக்கை கொண்டிருந்தார். அது பயனற்றுப் போகவே, தொடர்ந்து, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இதனால் அவர், 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது; இது, உலக ஜனநாயக அரங்கில் நிறவெறிக் கொடுமையின் உச்சமாகக் கருதப்பட்டது . 1990-ல் மண்டேலா விடுதலை பெற்ற பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகமாக மதிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவராக அப்போது விளங்கினார்.

இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்க மக்களுக்கு மக்களாட்சியின் மகத்துவத்தை உணர்த்திய நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தை பழங்குடி இன மக்கள் தலைவராக விளங்கினார்.

Mandela statementமண்டேலாவின் தந்தைக்கும் நான்கு மனைவியர். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவரதான் மண்டேலா. நெல்சன் மண்டேலா என்று பொதுவாக அழைக்கப்படும் இவரின் முழுப்பெயர் ‘நெல்சன் ரோபிசலா மண்டேலா’.

சிறுவயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கல்வி பெற்ற மண்டேலா, வாலிப வயதில் குத்துச் சண்டை வீரராக விளங்கினார். கல்வியின்பால் பெருநாட்டம் கொண்டிருந்த மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களில் உயர்க்கல்வியும் தொடர்ந்து சட்டக்கல்வியும் பெற்றபின், தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார். இருந்தாலும், மக்கள் நலனை மனதில் கொண்டதால், தான் உண்டு தன் வேலை உண்டு என்று அளவில் நெல்சனால் வாழமுடியவில்லை. அதனால், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

1962-ல் சிறையில் அடைக்கப்பட்டு, ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர் வேறெவரும் இலர். பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்த தென்னாப்பிரிக்க அரசு, மண்டேலா தன் மனைவியைச் சந்திப்பதற்குக்கூட தடைவிதித்தது. 1988-ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார். அப்போதைய தென்னாப்பிரிக்கத் தலைவரான ஃப்ரெடரிக் வில்லியம் டி’கிளார்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலாவின் விடுதலை குறித்தும் அறிவித்தார். 1990-ல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71.

Nelson-Mandela1994-இல் தென்னாப்பிரிக்க அதிபர் ஆனபின், 1998-ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா, 1999-ல் பதவியை விட்டு விலகினார். ஜனநாயக மாண்பைப் போற்றிய இம்மாமனிதர், இரண்டாவது தவணைக்கு அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட மண்டேலா, 2013 டிசம்பர் 5-ஆம் நாளில், தனது 95-வது வயதில் காலமானார். அவரின் புகழ் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

–          ஞாயிறு நக்கீரன்