நகங்களைப் பிடுங்குதல்.. பிறப்புறுப்புகளை சிதைத்தல்..! இலங்கையில் கொடூர சித்திரவதைகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

tortureஇலங்கையில், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக சித்திரவதை தொடர்வதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், மனித உரிமைகள், சீர்திருத்தங்கள், நீதி வழங்குதல் உள்ளிட்ட விடயங்களில் முன்னேற்றம், மிகவும் மெதுவானதாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

torture4இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஸன் தெரிவித்துள்ள கருத்துகளை அடிப்படையாக கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பென் எமர்ஸனின் கருத்துக்கள் ஊடாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை, ஆழமான தவறுகளைக் கொண்டது என வர்ணித்ததுடன், அதன் கீழ் கைது செய்யப்படுவோர் மீதான சித்திரவதை என்பது, “வழக்கமானதாகவும் அதிகளவிலும்” காணப்படுகிறது.

“சட்டம், தமிழ்ச் சமூகத்துக்கு எதிராக ஒப்பீட்டளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக, அரசின் மெருகூட்டப்பட்ட சித்திரவதைக் கருவியின் கடுமையான பாதிப்பை, அச்சமூகம் எதிர்கொண்டுள்ளது.

“பாதுகாப்புத் துறையில், சித்திரவதை என்பது ஆழமாகப் பதியப்பட்டுள்ளது. கொடூரமான சித்திரவதை தொடர்பில், வருந்தத்தக்க, நேரடியான அனுபவங்களை நான் கேட்டறிந்தேன்.

“தடிகளால் அடித்தல், உடலுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இருத்துதல், மண்ணெண்ணெயில் தோய்க்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்து மூச்சுத்திணற வைத்தல், விரல் நகங்களைப் பிடுங்குதல், விரல் நகங்களுக்குக் கீழ் ஊசிகளைச் செருகுதல்,

பல்வேறு வகையிலான தண்ணீர்ச் சித்திரவதைகள், பெருவிரல்களில் கட்டிப் பல மணி நேரங்களுக்குத் தொங்க விடுதல், பிறப்புறுப்புகளை சிதைத்தல் ஆகியவற்றை, இந்தச் சித்திரவதைகள் உள்ளடக்குகின்றன”

2016ம் ஆண்டின் இறுதியில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 80 சதவீதமானோர், சித்திரவதை, பௌதீக ரீதியான தவறான நடத்தை ஆகியவற்றைச் சந்தித்ததாகக் கூறுகின்றனர்.

சித்திரவதை, இவ்வளவு தூரத்துக்கு அதிர்ச்சிகரமாகக் காணப்படுகின்ற போதிலும், பயன்தரக்கூடிய விசாரணைகள் இல்லாமையைக் காணப்படுகின்றது.

12 சந்தேகநபர்கள், விசாரணை எதுவுமின்றி 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலதிகமாக 70 பேர், 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை, அதிகளவிலான பாதுகாப்புச் சவாலைச் சந்திக்கிறது. எனினும், சீர்திருத்தம், நீதி, மனித உரிமைகள், ஏறத்தாழ அதே இடத்திலேயே இருக்கின்றது.

நிலைத்திருக்கும் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக, நிலைமாறு கால நீதிக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கும், பாதுகாப்புத் துறையின் அவசரமான சீர்திருத்தத்துக்கும் வழங்கிய சர்வதேச அப்பணிகளை, இலங்கை நிறைவேற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilmirror.lk

TAGS: