மனித உரிமை ஆர்வலர் மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு

adilur rahmanவங்காளத் தேச மனித உரிமைகள் ஆர்வலர், அடிலுர் ரஹ்மான் கான் மலேசியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டார். இன்று காலை, சுமார் 4 மணியளவில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு, நாட்டில் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

மரணத் தண்டனைக்கு எதிரான ஆசியப் பிணையம் (Anti Death Penalty Asia Network) மற்றும் கோலாலம்பூர் & சிலாங்கூர் சீன மாநாட்டு மண்டபமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘மலேசியா மற்றும் ஆசியப் பசிபிக்கில் மரண தண்டனையை இரத்து செய்க’ எனும் மாநாட்டில் கலந்துகொள்ள அவர் இங்கு வந்திருந்தார்.

குடிநுழைவுத் துறை இயக்குநர் முஸ்தாஃபார் அலியைத் தொடர்பு கொண்டபோது, குடிநுழைவு இலாகா மேற்கொண்ட சோதனையின் போது, அடிலுரின் பெயர் ‘தரையிறங்கத் தடை’ எனும் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால்; அவருடைய நுழைவை நாங்கள் வேறொரு அமலாக்கா இலாகாவின் பார்வைக்குக் கொண்டுசெல்ல வேண்டியத் தேவை ஏற்பட்டது எனக் கூறினார்.

“அந்த அமலாக்க இலாகா, அடிலுரின் நுழைவைத் தடை செய்யப் பரிந்துரைத்தது”, என முஸ்தாஃபார் அலி தெரிவித்தார். குடிநுழைவு அதிகாரிகள், நிலையான இயக்க நடைமுறைகளைப் பின்பற்றியே அவரைச் சோதனை செய்தனர் எனவும் அவர் மேலும் கூறினார்.

தன் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட காத்திருந்த நேரத்தில், விமான நிறுவனம் அவரின் உணவு உட்பட, அனைத்து நலனையும் நன்கு கவனித்துக் கொண்டது எனவும் முஸ்தாஃபார் கூறினார்.

இன்று இரவு 8.05 மணி, எம்.எச்.112 விமானத்தில் அடிலுர் அவரின் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டார் என நியு ஸ்திரேட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

முன்னதாக, மலேசியாவுக்குள் நுழைய அடிலுருக்கு அனுமதி மறுத்தது குறித்து, பெர்சே 2.0 கவலை தெரிவித்தது. என்ன காரணத்தால் இத்தடை விதிக்கப்பட்டது என்பது குறித்து, உள்துறை அமைச்சும் குடிநுழைவு துறையும் விளக்கம் அளிக்க வேண்டும் என பெர்சே 2.0 இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வாயிலாகக் கேட்டுக் கொண்டது.