தொடரும் துயரம்.. ஒரே ஆண்டில் நாடு முழுவதும் 11,400 விவசாயிகள் தற்கொலை

farmer2

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் 11,400 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் தற்கொலை என்பது நாடு முழுவதும் தொடர் நிகழ்வாகவே உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியை ஏற்படுத்தின. இப்பிரச்சனை தொடர்பாக நேற்று எழுப்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், விவசாயிகள் விளைப்பொருட்களுக்கு லாபகரமான விலையை பெறுவதை உறுதி செய்வதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது என விமர்சனம் செய்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், 2016ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 11,400 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என தேசிய குற்றப்பதிவு ஆணைய தரவுகள் கூறுகின்றன. 2015-ம் ஆண்டு 12,602 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளன. விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக ராதாமோகன் சிங் குறிப்பிட்டார்.

மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை 1.5 மடங்கு உயர்த்தி தருவதாக 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே வாக்குறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டி அவர் பேசினார். பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு ரூ.3,560 கோடி பிரிமியம் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் ராதாமோகன் தெரிவித்தார்.

பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களே அதிகம் பயன்பெறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்த ராதாமோகன்சிங், பயிர்களை காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதனை பயன்படுத்தி பலனடைய வேண்டாம் என நினைக்கும் மாநில அரசுகள் இதற்கென தனி நிறுவனங்களை தொடங்கிக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

ஆனால் எங்கோ ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் மாறி விவசாயிகளின் தற்கொலை தினசரி செய்தியாகி வருகிறது. தொடரும் துயரத்தை தடுக்க தங்களுக்கு உரிய நிவாரணத்தொகையை அரசு வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

tamil.oneindia.com

TAGS: