விக்ரம் வேதா – திரை விமர்சனம்

vikram vedhaசென்னையின் முக்கிய தாதாக்களில் ஒருவர் வேதா எனப்படும் விஜய் சேதுபதி. அவரை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று காவல்துறையில் சிறப்பு படை ஒன்று அமைக்கப்படுகிறது. பிரேம் தலைமையிலான அந்த அமைப்பில் என்கவுண்டரில் கைதேர்ந்தவரான மாதவனும் இருக்கிறார். பிரேமின் வழிகாட்டுதலின்படி விஜய் சேதுபதியை என்கவுண்டர் செய்வதற்காக வேதாவை அந்த குழு தேடி வருகிறது.

இந்நிலையில், விஜய் சேதுபதி இருக்கும் இடம் குறித்து ரகசிய தகவல் ஒன்று கிடைக்க, மாதவன் உள்ளிட்ட அந்த குழு சம்பவ இடத்திற்கு விரைந்து, அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இதில் குற்றவாளி இல்லாத ஒரு நபரையும் என்கவுண்டர் செய்து விடுகிறார்கள். மேலும் அந்த நபரை குற்றவாளி என்றும் போலீஸ் அறிக்கையில் அறிவிக்கின்றனர். இதுஒருபுறம் இருக்க மாதவனுக்கு வழக்கறிரான ஷரத்தா ஸ்ரீநாத்துடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில், முதல் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து, விஜய் சேதுபதி இருக்கும் இடம் குறித்த தகவல் மீண்டும் கிடைக்க, இந்த முறை விஜய் சேதுபதியை கட்டாயம் என்கவுண்டர் செய்துவிட வேண்டும் என்று பெரிய படையே செல்கிறது.

ஆனால் விஜய் சேதுபதி அவராகவே காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சரணடைகிறார். தனி ஆளாக வந்து சரணடைந்த விஜய் சேதுபதியிடம் மாதவன் விசாரணை நடத்துகிறார். அப்போது, தனது வாழ்க்கையில் நடந்த கதை ஒன்றை சொல்லும் விஜய் சேதுபதி, அதிலிருந்து கேள்வி ஒன்றை கேட்கிறார்.

மாதவன் அந்த கேள்விக்கு பதில் சொன்ன உடனேயே, விஜய் சேதுபதிக்கு ஜாமீன் கிடைத்து வெளியே சென்றுவிடுகிறார். விஜய் சேதுபதியை ஷரத்தா ஸ்ரீநாத் ஜாமீனில் எடுக்கிறார். இந்நிலையில் பிரேம் கொலை செய்யப்படுகிறார். இதனிடையே மாதவன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் பிரிந்து விடுகின்றனர்.

பிரேமை கொலை செய்தது விஜய் சேதுபதி தான் என்று மாதவன், விஜய் சேதுபதியை என்கவுண்டர் செய்ய தேடி வருகிறார். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியை கண்டுபிடித்து அவரை கைதும் செய்கிறார்.

பின்னர் பிரேம் கொலை குறித்து விஜய் சேதுபதியிடம் மீண்டும் விசாரணை நடத்தும் மாதவனிடம், விஜய் சேதுபதி மீண்டும் ஒரு கதை சொல்லி கேள்வி கேட்கிறார்.

இவ்வாறாக வேதா(ளம்) எனப்படும் விஜய் சேதுபதி விக்ரம்(ஆதித்தன்) எனப்படும் மாதவனிடம் கதை சொல்லி, அதிலிருந்து கேள்வி கேட்டு, அதில் ஒரு புதிர் ஒன்றை வைக்கிறார். அந்த புதிருக்கு பின்னால் என்ன இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடிக்கும் மாதவன் அதன் பின்னணியை எப்படி கண்டுபிடிக்கிறார்? அதில் என்ன உண்மை புதைந்து கிடக்கிறது? விஜய் சேதுபதி என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

வேதாளத்தின் கேள்விக்கு பதில் சொல்லும் விக்ரமாதித்தனாக நடித்திருக்கும் மாதவனின் கதாபாத்திரம் படத்திற்கே பலம். மாதவனைத் தவிர இந்த கதாபாத்திற்கு வேறு யார் நடித்திருந்தாலும் பொருத்தமாக இருக்காது என்று கூறுமளவுக்கு ஒரு போலீசாகவே வாழ்ந்திருக்கிறார்.

அவரது நேர்த்தியான நடிப்பால் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. இறுதிச் சுற்று படத்திற்கு பிறகு மாதவன் மீண்டும் தனது ஸ்டைலை நிரூபித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி ஒரு மாஸான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். வேதாளமாக புதிர் போட்டு அதற்கு பதிலை தேட வைக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ரசிக்கும்படி இருக்கிறது. விஜய் சேதுபதி ஒரு தாதாவாகவே வாழ்ந்திருக்கிறார். விஜய் சேதுபதி பேசும் வசனங்களுக்கு எப்போதும் போல நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அவரது தம்பியாக கதிர் குறைவான காட்சிகளில் வந்தாலும், முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

வழக்கறிஞராக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வரலட்சுமி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இருவரது கதாபாத்திரமும் ரசிக்கும்படி இருக்கிறது. இவர்களுடன் பிரேம் குமார் மஸ்தோ, ராஜ்குமார் என பலரும் படத்திற்கு பக்கபலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறனர்.

ஓரம் போ, வா கோட்டர் கட்டிங் படத்திற்கு பிறகு புஷ்கர் – காயத்ரி இயக்கியிருக்கும் விக்ரம் வேதா, சென்னையை ஆட்டிப்படைக்கும் தாதாக்களுக்கும், அவர்களை ஒழிக்க நினைக்கும் போலீசுக்கும், அதனிடையே நடக்கும் புதிருக்கும் இடையே நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது.

6 வருட இடைவெளிக்கு பிறகு புஷ்கர் – காயத்ரியின் இணை இயக்கத்தில் திரைக்கதையை சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். முன்னணி இரண்டு நாயகர்களை ஒரே படத்தில் கையாளுவது என்பது எளிதல்ல. அதேபோல் இருவரது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு.

சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் அனைத்துமே ரசித்து கேட்கும்படி இருக்கிறது. படத்தின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பின்னணி இசைக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது. பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவில் சென்னை கேங்ஸ்டர்களை தெளிவாக காட்டியிருக்கிறார்கள்.

-tamilcinema.news