கல்விக்கூடங்களில் குண்டாயிசம்

– கி.சீலதாஸ், ஜூலை 23, 2017. part4 1 siladassகல்விக்கூடங்களில்  குண்டாயிசதத்தின்  கெடுபிடி  அச்சம்  தரும்  அளவுக்கு   பெருகிவருவது  உலகறிந்த  உண்மை.  அது  ஒரு  கலாச்சாரமாக  வளர்ந்து  வருகிறது.  அதை  கட்டுப்பாட்டிற்குள்  கொண்டுவராவிட்டால்  அது  பல  வேதனையான  விளைவுகளுக்கு  வித்திடும்  தகுதியுடையதாக  மாறிவிடும்,  பரவிவிடும்  என்பதை  சுமார்  பதினான்கு  ஆண்டுகளுக்கு  முன்பே  எழுதியிருந்தேன்.  அந்தக்  கலாச்சாரம்  உயர்நிலைப்  பள்ளிகள்,  கல்லூரிகள் மற்றும்  பல்கலைக்கழகங்கள்   ஆகியவற்றில்   மட்டும் அதன்  கொடூரமான  குணத்தைக்  காட்டவில்லை;  மாறாக  தொடக்கப்பள்ளிகளில்கூட  அது  விசுவரூபம்  எடுக்கத்  தொடங்கிவிட்டது. தொடக்கப்பள்ளி  மாணவர்கள்  குண்டர்களைப்  பற்றியும்  குண்டாயிசத்தைப்  பற்றியும்  பேசுகின்றனர்.  அவர்களுக்கு  அளவிடமுடியாத   அச்சம்  இருப்பதை  உணரமுடிகிறது.  குண்டாயிசத்தை  ஆதரிக்கும்  மாணவர்கள்  அது  குறித்து  தவறான  அபிப்பிராயத்தைக்   கொண்டிருபதாகத்  தெரிகிறது.  குண்டாயிசதத்தில்  ஆர்வம்  கொண்டிருக்கும்   மாணவர்கள்  உண்மையிலேயே   தவறான  வழிகளில்  செல்கின்றனர்  என்பதும்  மறுக்க  முடியாது.  மேலும் இந்த  சொற்களைப்  பயன்படுத்தி  அப்பாவி  மாணவர்களை  மிரட்டுவதும்  கவலைக்குரிய  வளர்ச்சியாகும். மாணவர்கள்  இந்த  “குண்டாயிசம்’  அல்லது  ‘குண்டர்’  என்பதில்  ஏன்  கவர்ச்சியுறுகின்றனர்  என்பதை  இதுகாறும்  கண்டறியாதது  விநோதமாக  இருக்கிறது. கல்விகூடங்களில்  குண்டாயிசத்தை  ஒழித்துவிடவேண்டும்  என்கின்ற  அபாயக்குரல்  பல  காலமாக  விடுக்கப்படும்  எச்சரிக்கை.  எனினும்  சமீப  காலமாக  மாணவர்களுக்கு  எதிரான  கொடுமையான  வன்முறைகள்  எதைக்  குறிக்கிறது?  இதுவரை  அந்த  கலாச்சாரம்  பரவாமல்  இருக்க  எடுக்கப்பட்ட  நடவடிக்கைகள்  என்ன?  அப்படியே  நடவடிக்கை  எடுக்கப்பட்டிருந்தாலும்,  அது  உண்மையிலேயே  நல்ல  பலன்களை  தந்தனவா  என்ற  கேள்வி  எழுப்பினால்  திருப்திகரமான  பதில்  கிடைக்காது.  எனவே,  பள்ளிகளில்  குண்டாயிசதத்தை  ஒழிக்க  ஆக்ககரமான  நடவடிக்கை  எடுக்கப்படவில்லை  என்ற  கருத்தும்  சிந்திக்கச்  செய்கிறது. குண்டாயிசதத்தை  நினைக்கும்போது  நம்மை  வருத்தும்  பிரச்சினைகள்   என்ன?  தலைமை  ஆசிரியர்கள்,  ஆசிரியர்கள்,  பெற்றோர்கள்  இந்த  வன்முறை  கலாச்சாரத்தைப்  பற்றி  என்ன  நினைக்கிறார்கள்?  அதை  ஒடுக்க  எத்தகைய  நடவடிக்கை  எடுத்தார்கள்?  அதே  சமயத்தில்,  இந்த  வன்முறை  கலாச்சாரத்திலே  பெற்றோர்களின்  பங்கு  என்ன? அது  பரவுவதைத்  தடுக்க  அவர்கள்  மேற்கொண்ட  பாதுகாப்பு  நடவடிக்கைகள்  என்ன?  கொடுத்த  ஒத்துழைப்பு  என்ன? தன்  மகன்  அல்லது  மகள்  தவறானப்  பாதையில்  போவதை  அறிந்தும்  அதை  மூடிமறைப்பதில்  பெற்றோர்கள்  காட்டும் Slide1  உற்சாகம்,  வியப்புக்குள்ளதாகும்.  அவர்களின்  பிள்ளைகள்  தவறு  செய்யும்  சுபாவம்  கொண்டவர்கள்  என்பதை  உணர்ந்த  பிறகும்  அதை  மூடிமறைக்கும்  பெற்றோர்களும்  குற்றவாளிகளே  என்றால்  தவறாகாது. மாணவர்கள்  பள்ளிக்கூடத்திற்குப்  போய்  கல்வியறிவு  பெறவேண்டுமென்பது  பெற்றோர்களின்  எதிர்பார்ப்பு.  அதோடு   அவர்கள்  தவறான  வழியில்  போகமாட்டார்கள்  என்ற  பிரார்த்தனையும்   உண்டு. குண்டர்  கலாச்சாரத்தில்  பங்குபெறும்  மாணவர்கள்  சமுதாயத்திற்கு  எதிராகச்  செயல்படும்  துரோகிகள்.  அவர்களின்  பெற்றோர்  அதற்கு  உடந்தையாக  இருந்தால்,  அவர்களும்  குற்றவாளிகள்.  சமுதாயத்திற்கு  எதிராகச்  செயல்படும்  பதர்கள்,  சம்பந்தப்பட்டவர்கள்  எல்லோரும்   சமுதாயப்  பொறுப்பை  உணர்ந்து  செயல்பட்டாலன்றி,  சமுதாயம்  அச்சமின்றி  வாழமுடியாது. பள்ளிக்கூடத்தில்  இருக்கும்  பொறுப்பாளர்கள்  மாணவர்களின்  நடத்தையிலும்  கவனம்  செலுத்துகிறார்கள்  என்றாலும்  அதை  உணராத  பெற்றோரின்  நடத்தையில்  மனமாற்றம்  தேவை.  காவல்துறையின்  பங்கு  இதில்  முக்கியமானது  என்றும்  சொல்லலாம்.