முள்ளிவாய்க்காலில் மூர்ச்சையாக்கப்படுமா தமிழினத்தின் எதிர்காலம்!

ஒரு இனம் அழிக்கப்படுவதற்கு இன்னொரு இனத்தின் ஆதிக்கமே காரணமாக உள்ளது. இதில் யார் உயர்நிலை பெற்றவர், தாழ்ந்தவர் என்ற போட்டியும் செல்வாக்கு செலுத்துகின்றது.

ஒரு இனம் அழிக்கப்படுகின்றதென்றால் அங்கு கொல்லப்படுவது வெறுமனே மனித உயிர்கள் மாத்திரம் அல்ல. அந்த இனத்தின் பாரம்பரிய, கலை, கலாச்சார விழுமியங்களும் தான்.

இதனை இலங்கையில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தம் பறைசாற்றுகின்றன. இந்நிலையில், இலங்கையில் பாரிய யுத்தம் ஒன்று வெடிப்பதற்கு வித்திட்ட இன வன்முறையே கறுப்பு ஜூலை கலவரம் அல்லது 1983ம் ஆண்டு கலவரம் என கூறப்படுகின்றது.

1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகளால் இலங்கைத் தமிழர்களை கொடுமைப்படுத்தியும், அவர்களது சொத்துக்களை அழித்தும் சுமார் 400 முதல் 3000 பேர் வரையானவர்கள் கொலை செய்யப்பட்ட ஒரு கொடூர இன வன்முறையே கறுப்பு ஜூலை என்பதை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி – தபால் பெட்டிச் சந்தியில் வைத்து இராணுவத்தினர் பயணம் செய்த வாகனங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 13 இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதன் தூண்டுதலால் நிகழ்த்தப்பட்ட ஒன்றே கறுப்பு ஜூலைக் கலவரம் எனக் கூறப்பட்டாலும், இதுவொரு திட்டமிடப்பட்ட தமிழினப் படுகொலையாகவே அனைவராலும் பார்க்கப்படுகின்றது.

பூதாகரமாக அரங்கேறிய இந்த கறுப்பு ஜூலை நிகழ்வுகளே பின்னாளில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், தனி ஈழம் கோரிய 30 வருட கால யுத்தத்திற்கு வழிவகுத்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த கறுப்பு ஜூலை இனக் கலவரத்தின் போது அதிகமாக இலங்கைத் தமிழர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். கத்திகள், பொல்லுகள், துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கொண்டு அப்பாவி மக்கள் மீதான வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன.

தலைநகர் கொழும்பில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் அடித்து நொருக்கப்பட்டும், தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், ஏனைய பகுதிகளிலும் கலவரங்கள் பரவின.

இந்தக் கலவரங்களில் பலர் வெட்டிக் கொல்லப்பட்டனர். 3000 ஆயிரம் பேர் வரை வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்கள் என கணிப்பீடுகள் தெரிவிக்கின்ற போதிலும், அவை உறுதிப்படுத்தப்படாத நிலையே இன்றும் காணப்படுகின்றது.

நகரப் புறங்களில் மாத்திரமல்ல கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைகளில் இருந்த அரசியல் கைதிகளான தமிழர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். வரலாற்றில் மிக மோசமான சிறைச்சாலைக் கலவரமாகவும் இது பார்க்கப்படுகின்றது.

இதில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 25,000 இலிருந்து தொடங்கி இன்னும் எண்ணிக்கைக்குள் அடங்காதவையாக காணப்படுகின்றது.

எனினும் இன்று வரை கலவரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படவுமில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் கிடைக்கவில்லை.

அன்று ஆரம்பமான அந்த கறுப்புத் தாக்குதல் இன்று வரை தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வண்ணமே காணப்படுகின்றது.

இந்நிலையில், 2009ம் ஆண்டு மே மாதம் 30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. முடிவுக்கு கொண்டு வரப்பட்டது யுத்தம் மட்டுமல்ல தமிழர்களின் உரிமைகளுமே.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொத்துக்கொத்தாய் அழிக்கப்பட்ட 30 வருட கால யுத்தம் தமிழ் மக்கள் மீதான ஒரு இனவழிப்பாகவே ஈழத் தமிழர்களால் பார்க்கப்படுகின்றது.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மக்கள் நிம்மதியான சூழலில் வாழ்கின்றனர் என சிங்களத் தலைமைகள் முகம் மலர்ந்து மார்தட்டிக் கொண்டாலும், அனைத்துமே தமிழ் மக்களின் கண்ணீரின் மத்தியிலே நிகழ்ந்தது என்பதை சிங்களச் சமூகமும் கூட மறுக்காது.

இன்று தம் கண்முன்னே இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும், கடத்திச் செல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக தமிழ் மக்கள் அகிம்சை ரீதியிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் அவர்களுக்கான தீர்வுகள் எட்டாக்கனியாகவே உள்ளது.

ஒரு காலத்தில் ஆயுதம் தாங்கிப் போரிட்ட தமிழ் இனம் நல்லாட்சி அரசில் அகிம்சை ரீதியில் போராடுகின்றது. ஆட்சி மாற்றங்கள் எதுவாயினும் போராட்டத்தின் மூலம் தான் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாய சூழலுக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

உலகெங்கும் புலம்பெயர் மக்களாக தமிழர்கள் வாழ்கின்றனர். எனினும் தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு இருக்கின்றது என்றால் அது கேள்விக்குறியே.

30 வருட கால யுத்தம் இன்று எம்மிடையே பறைசாற்றுவது என்ன? மறைக்கப்பட்ட தமிழர்களின் உரிமை மீறல்களும் மறுக்கப்பட்ட படுகொலைகளும், மனிதம் மறந்த இரத்தக்கடலும். உள்நாட்டு யுத்தத்தில் வெற்றி கண்ட இலங்கை அரசு தமிழர்களை பாதுகாத்து அமைதியான சூழலில் வாழ வைத்துள்ளதாய் எண்ணி கனவு கண்டுகொண்டிருக்கின்றது.

ஒரு முழு மனிதனின் காது, கை, மூக்கு, என அனைத்தையும் காப்பாற்றி கண்ணைக் குருடாக்குவது தான் யுத்த வெற்றியா? இதுதானா இலங்கையின் யுத்த வெற்றி.

ஒரு குடும்பத்தில் மனைவியையும், பிள்ளையையும் விட்டு வைத்து கணவனின் உயிரை பறித்து நிம்மதியாக வாழுங்கள் என்று கூறுமளவில் தான் இலங்கை அரசு செயற்பட்டுள்ளது.

இங்கு மரித்தது ஒரு ஆண் மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் அத்திவாரம். ஒரு சமூகத்தின் எதிர்காலமும் ஆகும்.

இவ்வாறான இடையறா துன்பங்களை பெற்றவர்களுக்கு ஜூலை 23 மட்டும் கறுப்பு தினமல்ல. அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டு வாழ்ந்த ஒவ்வொரு தினங்களும் கறுப்பு ஜூலையே.

தன்னைப் பற்றி தான் சார்ந்த சமூகம் பற்றி எண்ணற்ற கனவுகளைக் கொண்ட எத்தனை சின்னஞ்சிறுவர்களின் உயிர்கள், அப்பாவி மழலைகளின் உயிர்கள் இதன் மூலம் காவு கொள்ளப்பட்டுள்ளது.

அத்தனை கனவுகளையும் திருப்பி மீட்டுத்தர எவராலும் முடியுமா?? அந்தக் கனவுகளில் எத்தனை விஞ்ஞானிகள், எத்தனை மருத்துவர்கள், எத்தனை கல்விமான்கள், எத்தனை தமிழ் புலமைத்துவம் வாய்ந்தவர்கள் இருந்திருக்கலாம்.

அனைத்தையும் தொலைத்து விட்டது இந்த கொடூர யுத்தம். ஏற்கனவே கூறியது போல ஒரு இனம் அழிக்கப்படுகின்றதென்றால் அங்கு அழிக்கப்படுவது மனித உயிர்கள் மட்டுமல்ல. அச்சமூகத்தின் கலை, கலாச்சார, பண்பாடுகளுமே. மாறாக அந்தச் சமூகத்தின் எதிர்காலமுமே.

இனி ஒரு கறுப்பு தினம் இலங்கையின் வரலாற்றிலும், தமிழர்களின் வரலாற்றிலும் தடம் பதிக்காமல் இருக்க முனைவோமாயின் நூற்றாண்டு காலமல்ல, தலைமுறைகள் கடந்தும் தமிழ் வாழும், தமிழர்களும் வாழ்வர்.

-tamilwin.com

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Gokulan அவர்களால் வழங்கப்பட்டு 23 Jul 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Gokulan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

TAGS: