மகாதிர் யாருடனும் விவாதம் நடத்தத் தயார், ஏன் நஜிப் பயப்படுகிறார்?

MreadyNnotபிரதமர் நஜிப் ரசாக்கின் கூடாரத்தில் இருக்கும் எவருடனும் விவாதம் நடத்தத் தயார் என்கிறார் முன்னாள் பிரதமர் மகாதிர்.

ஆனால், நஜிப்பும் அவரது துணையாள் நஸ்ரி அப்துல் அசிஸும் என்னைப் போன்ற முதியவரைக் கண்டு பயப்படக்கூடாது.

“கம் லா நஸ்ரி மற்றும் நஜிப், பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? நான் ஒரு வயதானவன். ஒரு வயதானவரைக் கண்டு பயப்படுகிறீரா?”, என்று கோலாலம்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது மகாதிர் கேட்டார்.

நஜிப்பிற்கு பதிலாக விவாதம் நடத்த முன்வந்திருக்கும் சிறப்பு விவகாரங்களுக்கான இயக்குனர் புவாட் ஸார்காசியை “பயப்படுவதற்கு ஒன்றுமில்லை 2.0” விவாத மேடையில் விவாதத்திற்கு ஏற்றுக்கொள்வாரா என்று மகாதிரிடம் கேட்கப்பட்டது.

நஜிப் கூடாரத்திலிருந்து எந்தப் பிரதிநிதியையும் ஏற்றுக்கொள்ள தாம் தயார் என்று மகாதிர் பதில் அளித்தார்.

“பயப்படுவதற்கு ஒன்றுமில்லை 2.0 ” என்ற கலந்துரையாடலை பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) இளைஞர் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. அந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 13 இல், ஷா அலாம், தேவான் ராஜா மூடா மூசாவில் பிற்பகல் மணி 3.00 அளவில் தொடங்கும்.

நஜிப் எப்படி அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் ரிம2.6 பில்லியனைப் பெற்றார் என்பது பற்றி அவரை துளைத்தெடுக்க மகாதிர் திட்டமிட்டிருக்கிறார்.

நஜிப் அப்பணம் தமக்கு சவூதி அரேபிய அரச குடும்பத்திலிருந்து நன்கொடையாகக் கொடுக்கப்பட்டது என்று தொடர்ந்து கூறிவருகிறார்.

சட்டத்துறை தலைவர் முகம்மட் அபாண்டி அலி பிரதமர் எந்தக் குற்றமும் புரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

அப்படியானால், வா விவாதத்திற்கு என்கிறார் மகாதிர்.

முன்னதாக, பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்ற விவாதம் சுக்காகுவாம் என்ற குழுவினரால் கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப மையத்தில் நடத்தப்பட்டது.

மகாதிரும் நஜிப்பும் அழைக்கப்பட்டிருந்தனர். அங்கு சுமார் 2,000 பேர் குழுமியிருந்தனர். மகாதிர் வந்திருந்தார். நஜிப் வரவில்லை. அங்கிருந்தவர்களிடம் மகாதிர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது போஸீசார் தலையிட்டு அவரது பேச்சை நிறுத்தினர். பாதுகாப்பை காரணமாகக் கூறி அந்த நிகழ்ச்சியை போலீசார் நிறுத்தினர்.