பினாங்கு மாநிலத்திற்குப் பாரிசானின் சிறப்பு தேர்தல் அறிக்கை

Slide2எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலுக்கு, பினாங்கு மாநிலத்திற்குத் தனியாக ஒரு தேர்தல் அறிக்கையைத் தேசிய முன்னணி தயாரிக்குமென, தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறுகிறார்.

பாரிசான் அல்லது பக்காத்தான் ஹராப்பான் ஆகிய இரு கூட்டணி கட்சிகளுக்கிடையே எதைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க, மாநில மக்களுக்கு அத்தேர்தல் அறிக்கை ஒரு வாய்ப்பாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

ஜனநாயகச் செயல் கட்சி (ஜசெக), மக்களுக்கு 51 வாக்குறுதிகளை வழங்கி, ஒன்பது ஆண்டுகளாகப்  பினாங்கை ஆட்சி செய்து வருகிறது. இக்காலக்கட்டம், மக்கள் அவர்களின் ஆட்சியை மதிப்பிடுவதற்கு ஒரு வாய்ப்பாகும். எனவே நிச்சயமாக, மாநில அரசு இந்த வாக்குறுதிகளைப் பூர்த்தி செய்திருக்கிறதா இல்லையா என்பதை மக்களால் ஆய்ந்தறிய முடியும் என அவர் தெரிவித்தார்.

“தேர்வு செய்யும் திறன் மக்களுக்கு வேண்டும். நாங்கள் ஓர் ஆரோக்கியமான அரசியலை நடைமுறைப்படுத்த விரும்புகிறோம். நாங்கள் பினாங்கு மக்களுக்கு ஒரு வாக்குறுதியை கொடுக்கிறோம், அவர்கள் தேர்ந்தெடுக்கட்டும். அவர்களால் பலவீனங்களைக் காண முடியும். நாங்கள் ஆரோக்கியமான முறையில் போட்டியிட விருப்புகிறோம், மக்கள் முடிவெடுக்கட்டும்,” என  இன்று புக்கிட் மெர்த்தாஜாம் அம்னோ பிரதிநிதிகள் மாநாட்டைத் தொடக்கி வைத்தப்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

பாரிசானின் தேர்தல் அறிக்கையில், மாநில மக்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் கிராமப்புறப் பகுதிகளை அபிவிருத்தி செய்தல் போன்றவை தொட்டும் விவரிக்கப்படும் என சாலே கூறினார்.

“தற்போதைய பலவீனங்களை நாம் நிச்சயம் பார்த்திருப்போம். பினாங்கு மாநிலம் நிலைத்தன்மை மிக்கதாக உருவாக வேண்டும். மத்திய அரசாங்கம் பாரிசானின் ஆட்சியில் இருப்பதால், அந்தத் தலைமைத்துவத்துடன் இணைந்திருக்கும் ஒரு மாநில ஆட்சியையே நாங்கள் விரும்புகிறோம்.”

“பினாங்கில், பாரிசான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு இடையே Slide1நெருக்கமான ஒத்துழைப்பு உருவாகும். இதன்வழி, நிச்சயமாக அதிகமான வாய்ப்புகள் உருவாவதோடு, திறம்பட செயல்படவும் அது உதவும்,” என்று அவர் கூறினார்.

தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும் எனக் கேட்டதற்கு, “அதை நாங்கள் பினாங்கு பாரிசானின் பொறுப்பிலேயே விடுகிறோம். மாநில பாரிசான் தலைவர்கள் மத்திய பாரிசான் தலைவர்களைச் சந்தித்துப் பேசியப் பின், பொது மக்களிடம் அவ்வறிக்கையை அறிவிப்போம்.

முன்னதாக, அம்னோ பொருளாளருமான சாலே தமதுரையில், மக்களால் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் நாம் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அம்னோ தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.

“தலைவர்கள் வெறுமனே களத்தில் இறங்குவதாக இருக்கக்கூடாது, மாறாக, மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்குத் தீர்வுகாண வழிவகைகளைக் கண்டறிய வேண்டும்”, என அவர் கூறினார்.

“நம்பிக்கையின் பேரிலேயே நமக்கு ஒரு பதவி வழங்கப்படுகிறது. நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். மக்களுக்கு உதவுவோம் என்று சொன்னால், உதவ வேண்டும். மக்களின் பிரச்சனைகளுக்குச் செவி சாய்த்தால், நிச்சயம் அவர்கள் நம்முடன் இருப்பார்கள்”, என அவர் மேலும் விளக்கினார்.

அம்னோவிலிருந்து விலகி, ஜசெக-வில் இணைந்துகொண்ட டாக்டர் மகாதீர் பற்றி கேட்டபோது, “விடுங்கள், இதற்குமுன்  முஹிடின் யாசினும் இதைத்தானே செய்தார்”, எனக் கூறி மேலும் கருத்துரைப்பதைத் தவிர்த்துவிட்டார்.

“தலைவர்கள் வருவார்கள் போவார்கள். ஆக, நாம் கட்சியைத்தான் பாதுகாக்க வேண்டும்”, எனவும் சாலே பெர்னாமா செய்திகளிடம் கூறினார்.