திசையற்ற போக்கில் மலேசிய திராவிடர் கழகம் – ஞாயிறு நக்கீரன்

MDKஇந்த மலையகத் திருநாட்டின் மூத்த சமூக – சுயமரியாதை இயக்கமான மலேசிய திராவிடர் கழகம்(மதிக), தனது 71-ஆவது பொதுக்குழுக் கூட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரத்து நேதாஜி அரங்கில் கொண்டாடி மகிழ்ந்து கலைந்து சென்றது.

மதிக-வின் இந்நாளையத் தலைவர் எஃப்.காந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பினாங்கு, பேராக், சிலாங்கூர், மலாக்கா ஆகிய நான்கு மாநிலத் தலைவர்கள் உட்பட அதன் தேசியப் பொறுப்பாளர்களும் நாடளாவிய நிலையில் பேராளர்களும் கலந்து கொண்டனர். காலையில் தொடங்கி மாலை 5.00 மணி அளவில் முடிந்தது மதிக-வின் 71ஆவது பொதுக்குழு கூட்டம்.

நாடாளுமன்ற மேலவைத் தலைவரும் மஇகா உதவித் தலைவர்களில்    ஒருவருமான விக்னேசுவரன் சார்பில் பேராக் மாநில சட்டமன்ற மேநாள் அவைத்தலைவர் கணேசன், இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.

நாடு விடுதலை அடைவதற்கு ஏறக்குறைய பதினோரு ஆண்டுகளுக்கு முன்னம் தோற்றம் கண்ட இந்த இயக்கத்திற்கென்று சில வரலாற்றுச் சிறப்புகள் உண்டு. மஇகா-வின் வயதுதான் மதிக-விற்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, பொதுமக்களிடத்தில் உண்டியல் ஏந்திய நிதியைக் கொண்டு, முதல் முதலில் சொந்தக் கட்டடத்தை ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே அதுவும்இரவு-பகல் எந்நேரமும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத ‘மஸ்ஜித் இந்தியா’ வட்டாரத்தில் பெற்ற வலிமையான இயக்கமும் மதிகதான்.

கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் நாடாளுமன்ற மேலவையில் உறுப்பியம் பெறும் அளவுக்கு வலிமையான இயக்கமாகத் திகழ்ந்த மதிக ஏற்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி என்றால் தலைநகரமே குலுங்கும். அப்படிப்பட்ட கழகம் தற்பொழுது, ‘பத்தோடு பதினொன்று; அத்தோடு இதுவொன்று’ என்ற நிலைக்கு ஆளாகியுள்ளது.

இதற்கெல்லாம் காரணம், இது கொள்கைவாதிகளின் பாசறையாக இல்லாமல், ஆள் பார்த்து அணிபிரியும் கூடாரமாகத் திகழ்வதுதான். இதற்கு சரியான சான்று, 2014-ஆம் ஆண்டின் நிறைவுப் பகுதியில்  மதிக பந்திங் வட்டார பிரமுகர் இராமசாமி இல்லத் திருமண விழாவிற்காக தமிழக திராவிடர்க் கழகத்தின் சார்பில் வழக்கறிஞர் திருமதி அருள்மொழி அழைக்கப்பட்டிருந்தார்.

MDK 1அதற்கான ஏற்பாட்டைச் செய்த மாந்த நேய திராவிடர்க் கழகத் தலைவர் நாக.பஞ்சு, அப்படியே ஒருசில கூட்டங்களிலும் அருள்மொழி பேசுவதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார். செய்ததோடு நில்லாமல் பத்திரிகை அறிக்கையையும் விட்டார். அவ்வளவுதான், உடனே சென்னை பெரியார் திடலுக்கு தகவல் பரந்தது. மதிக-வின் அப்போதையத் தலைவர் கி.வீரமணியிடம் பற்ற வைக்க, அடுத்த கணமே வீரமணி அருள்மொழியிடம் பேசி, மாந்த நேய திராவிடர்க் கழகம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நிகழ்ச்சியில்கூட பேசக்கூடாதென்று உத்தரவு போட்டார் போலும். அதனால், அருள்மொழியும் அடக்கமாக திருமணத்தை மட்டும் நடத்தி வைத்துவிட்டு தமிழகம் புறப்பட்டார்.

மதிக நிகழ்ச்சியாக இருந்தாலென்ன? மாந்தநேய திராவிடர் கழக கூட்டமாக இருந்தால்தான் என்ன? எந்த மேடையில் பேசினாலும் பெரியாரைப் பற்றியும் சுயமரியாதைக் குறித்தும்தானே அருள்மொழி பேசுவார்; பேசட்டுமே என்று சமாதானம் செய்யாமல், மலேசியத் திராவிட இயக்கத்தின் பிரிவினைக்கு சென்னையில் இருந்து தூபம் போட்டார் வீரமணி. மொத்தத்தில் மதிக-வின் கொள்கைப் பிரச்சாரமும்(!) தன்மானத்தைவிட இனமானமேப் பெரியது என்று முழங்கிய பெரியாரின் எண்ணத்தை வெளிப்படுத்தும் பாங்கும்(!) ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமும்(!) நடைமுறையில் இப்படி இருக்கிறது.

அதனால்தான், பாலர் பள்ளி மாணவர்களைக் கொண்டு வண்ணம் தீட்டும் போட்டி நடத்துவது; ஆரம்பக் கல்வி மதிப்பீட்டுத் தேர்வு என்னும் யூ.பி.எஸ்.ஆர். மாணவர்களுக்கு பரிசு கொடுப்பது; இருமொழிக் கொள்கைக்கு எதிராக பத்திரிகை அறிக்கை விடுவது என்ற அளவோடு தன்னை வரையறுத்துக் கொண்டு, இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘மானியம் பெறுவதற்காக முளைத்த இயக்கங்’களின் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டு பரிதாபமாக இன்று காட்சி அளிக்கிறது மதிக.

மதிக பல ஆக்கரமான திட்டங்களை செயலாக்கம் செய்து அதன் வழி அது இழந்த மதிப்பை மீட்கலாம்.

MDK 2பல்கலைக்கழக மாணவர்களையும் மாணாக்கியரையும் திரட்டி, ஒரு திருக்குறள் கருத்தரங்கை நடத்தி, ஐயன் வள்ளுவர் வகுத்த “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் கருத்தை எடுத்து சொல்லி எதிர்கால மலேசிய தமிழ்ச் சமூகம் சாதி பேதமற்று ஒருமித்த உணர்வுடன் திகழ நீங்களெல்லாம் பாடாற்ற வேண்டும் என்று கேட்கலாம்!

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிப்ரவரித் திங்களில் இதே மதிக, தன் தேசியப் பேராளர் மாநாட்டை ஈப்போ சாலை ‘கிராண்ட் பசிஃபிக் தங்கும் விடுதியில் நடத்திய அதே நேரத்தில் கூப்பிடு தூரத்தில் வன்னியர் சாதி மாநாடு நடைபெற்றது. அதுவும் பிரதமரின் சிறப்பு வருகையுடன் அம்னோ கட்டடத்தில்; இதைப்பற்றி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத மதிக, ஏதோ தூசியைத் தட்டிவிட்டு செல்வதைப் போல தன்போக்கில் சென்றுவிட்டது. தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தும் சுயமரியாதை இயக்க தேசியப் பேராளர் மாநாடு நடக்கும் அதே வட்டாரத்தில் அதே நேரத்தில் பிரதமர் தலைமையில் நாடளாவிய சாதிக் கூட்டம் நடைபெற்றது, இந்த இயக்கத்திற்கு பேரிழுக்காகும்.

இதைப்பற்றி முன்னமே அறியத் தவறி விட்டாலும் குறைந்தபட்சம் அன்றையக் கூட்டத்தில் இதைப்பற்றி ஒரு தீர்மானமாவது இயற்றி இருக்கலாம்; அதன் பிறகாவது சம்பந்தப்பட்ட அமைப்பிற்கோ அல்லது பிரதமர் அலுவலகத்திற்கோ ஒரு கடிதமாவது அனுப்பி, அதன்வழி இந்த மண்ணில் தன்னுடைய இருப்பையாவது மதிக காட்டிக் கொண்டிருக்கலாம்.

தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டு பதிமூன்று  ஆண்டுகள் ஆகிவிட்டன; அதன் பொருட்டு தமிழ் மொழியின் மேம்பாட்டைப் பற்றி என்றைக்காவது மதிக எண்ணிப் பார்த்தது உண்டா? தமிழ் மொழிதான் உலகின் தொன்மையான மொழி; இனிமையான மொழி; தனித்து இயங்கும் மொழி; உலக மொழிகளுக்கெல்லாம் சொற்களை வட்டியின்றி கடனளித்த மொழி, மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளைத் தோற்றுவித்த மொழி; அப்படிப்பட்டத் தமிழ்  மொழிக்கு மலேசிய அரசின் இருபது பல்கலைக்கழகங்களிலும் தமிழிருக்கை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கவும் மத்தியக் கூட்டரசிடமும் மாநில அரசுகளிடமும் கோரிக்கை வைக்கவும் மதிக முன்வர வேண்டும்.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ள இந்திய ஆய்வியல் துறையை, தமிழாய்வியல் துறை என்று பெயர் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும் என்ற எண்ணமும் மதிக-விற்கு ஏற்படவேண்டும்.

periyarமலேசியத் தமிழ் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட வன்முறை குறித்து பேசும்பொழுதெல்லாம், நம் இளைஞர்களுக்கு ஆன்மிக சிந்தனை போதவில்லை என்று ஆன்மிக எல்லையில் இருப்போர் கருத்து தெரிவிக்கும்போதெல்லாம், மதிக தன் பங்கிற்கு இளைஞர்கள் சீரான வழியில் வாழ வேண்டுமென்றால் திருக்குறள் சிந்தனை மேம்பட வேண்டும். “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம், உயிரினும் ஓம்பப் படும்” (அதிகாரம் ஒழுக்கமுடைமை; குறள் எண் 131) என்று நம் செந்நாப் புலவர் வள்ளுவர் ஒழுக்கம் உயிரைவிட மேலானது என்று சொல்லி இருப்பதால், நம் இளைஞர்கள் திருக்குறளை நன்கு கற்று அதன்படி ஒழுக வேண்டும் என்றெல்லாம் சொல்லாமல், ஆங்காங்கே திருக்குறள் கருத்தரங்கையும் நடத்தலாம்.

மலேசிய இந்து சங்கம் திருமுறை விழாவை நடத்துவதைப் போல, திருக்குறள் விழாவை நடத்த மதிக என்றாவது எண்ணம் கொண்டதுண்டா? மதிக-விற்கு தெரிந்தெல்லாம் தந்தை பெரியாரின் திருவுருவும் கருப்புச் சட்டையும் திராவிடம் என்னும் சொல்லும்தான்.

உயர்க்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பக்திப் பயிரை வளர்ப்பதற்குப் பதிலாக மூட நம்பிக்கையை வளர்ப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் மதிக-விடம் உதிக்கவில்லை.

ஆன்மிகக் கொள்கையைக் கடைப்பிடிப்பது அவரவர் உரிமை. ஆனால் மூட நம்பிக்கைக்கு அதுவும் நாளைய உலகின் தலைவரகளாகத் திகழப்போகும் இன்றைய உயர்க்கல்வி மாணவர்கள் கைக்கொள்ளும் மூடவழக்கம் நாளுக்கு நாள் பெருகுவதைப் பற்றிகூட நாட்டின் சுயமரியாதைப் பேரியக்கமான மதிக ஒருபோதும் கருத்தில் கொள்ளவில்லை.

இந்த நிலை நீடித்தால் இன்னும் நூறாண்டு கழித்து 171-ஆவது பொதுக் குழுவைக் கூட்டினாலும் மதிக-வால் இந்த மண்வாழ் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனுமில்லை. இனியாவது, மதிக புது செப்பம் பெறுமாவென பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • TAPAH BALAJI wrote on 24 July, 2017, 23:10

  இது ஒரு உண்மையான அதே சமயம் வேதனையான கருத்துக்கள் கொண்ட கட்டுரை. 1970 களில் மிகவும் ஒரு மரியாதைக்குறிய அமைப்பாக இருந்த இந்த திராவிடர் கழகம், காலப்போக்கில் சுயநலவாதிகளால் சீர்குலைந்து போனது.என் பிறப்பிடமான தாப்பா வட்டார ம.தி.க தான் அன்றய காலகட்டத்தில் மிகவும் முற்போக்காக இயங்கிய கிளை என்று சொன்னால் அது மிகையாகாது ! ஆனால் பிற்காலத்தில் சில தரப்பினர் சுய லாபத்துக்காக பகடைகளை நகர்த்தியதால் நாறிப்போனது அந்த கிளை. இது குறித்து மேலும் அதைப்பற்றி எழுத எனக்கு மனமில்லை. தேசிய அளவில் இன்று ம.தி.க மதிக்கப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக சொல்லவேண்டுமானால், இப்போது அதில் இருக்கும் சில தலைகள் அவர்களுக்குள் ஒரு வட்டம் போட்டுகொண்டு அடுத்தவர்கள் யாரும் அதன் உள்ளே போகாதபடிக்கு வேலி போட்டுகொண்டு சுயநலமாக, கிடைக்கும் மானியங்களுக்காக, கழகத்தை ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

 • தேனீ wrote on 24 July, 2017, 23:19

  கடை விரித்தோம் கொள்வாரில்லை! இனி வாரிக்கொல்வோம்!

 • abraham terah wrote on 25 July, 2017, 9:01

  ஆன்மீகம் என்றால் உடனே திருக்குறள் என்கிறீர்கள். ஏதோ, அவன் சாமியைக் கும்பிட்டால் உருப்புடுவான் என்கிற எண்ணம் யாருக்குமில்லை! அதனால் இதுவுமில்லை அதுவுமில்லை என்றாகிறது! அவன் இருக்கிற சாமியைக் கும்பிடட்டும்.உங்கள் நேரம் வரும் போது திருக்குறளை பற்றி பேசுங்கள்.

 • s.maniam wrote on 25 July, 2017, 13:47

  சொந்த கட்டிடம் கொண்டும் இன்று ஏன் ம .இ .கா காரனின் கட்டிடத்தில் பொது குழு கூட்டம் ! இவனுக்கெல்லாம் கால் கூச வில்லையா ! இந்த சங்கமும் மானம் மரியாதை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது !! தானை தலைவனுக்கு அடிவருடிகளாக தன்னை அர்ப்பணம் செய்து கொண்ட சங்கங்களில் இந்த சங்கமும் ஒன்று !! முத்தைய !! மணியம் !! ராமசாமி !! போன்றவர்களை கேளுங்கள் தடம் புரண்டது எப்படி என்று !! வன்னியன் அவன் ஜாதிக்காரனுக்கு மானமிழந்து மாநாடு நடத்தினால் !! மற்றவர்களுக்கு ஏன் வேர்க்க வேண்டும் !! வன்னியனும் வள்ளுவனின் குறள் படித்தவன் தானே !!”” ஜாதி இரண்டொழிய வேறில்லை “” என்ற வாக்கியம் அவனுக்கு உரைக்க வில்லை என்றால் மற்றவன் என்ன செய்வது !! ம .இ .கா . காரனை கூப்பிட்டு அவனுக்கு கும்பிடு போட்டு தலைமை தாங்க சொல்லும் ஈனா புத்தி இவனுக்கெல்லாம் மாறாதோ !! சங்கத்தை வைத்து அரசாங்கத்திடமும் !! ம .இ .கா . காரனிடமும் பிச்சை எடுப்பதை நிறுத்தி விட்டு ! சங்கத்தை இழுத்து மூடும் வேலையை பாருங்கள் !!

 • Ali Jinnaa wrote on 26 July, 2017, 0:52

  கட்டுரையும், கருத்தும் புனையும் புல்லர்கள் யாவரும் முதலில் தன் முதுகை திரும்பி பார்பது நன்று. உலகலாவிய நிலையில் புத்தி சொல்வது எளிதாகலாம் ஆனால் புத்தி சொல்லும் தன்மையை தாம் கடைப்பிடிக்க முடியுமா என்று எண்ணி பார்த்தால் ஒருவனும் தேரமாட்டான். சுயமரியாதையும், தன்மானனும், இனமானனமும் வேண்டும் என்று அறை நூற்றாண்ன்டு காலமாய் காட்டுக் கத்தாய் கத்தியும் எனவுக்கும் ரோசம் வராத பட்சத்தில் இனி எவனுக்கு புத்தி சொல்லி என்னவாக போகிறது. ஒரு இயக்கத்தின் நன்மை தீமைகளைக்குட பண்மையாக பகுத்தவோடு சொல்லத் தெரியாத மூடனுக்கும் முடவனுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாக தெரியவில்லை என்பதே எதார்த்தமான உண்மை. ஒவ்வொருவனும் சாதிப்போர்வையில் மறைந்துக்கொண்டு, பொச்சரிப்பும் போறாமையும் கொண்டு புழுதி வாரி தூற்றும் மாக்கள் இருக்கும் வரையில் எவனும் அவனுக்கும் அறிவுச் சொல்ல அருகதையற்றவரே.

 • iraama thanneermalai wrote on 26 July, 2017, 8:01

  திராவிடன் எனும் சொல்லை தமிழ் அகராதியிலிருந்து நீக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழரின் ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் தடுத்து வந்த ஒரு சொல் அது.திராவிடம் என கூறப்படும் ஆந்திரா,கன்னடா,கேரளா ஆகிய மாநிலங்களில் அந்த சொல்லுக்கு இடமில்லை என்பதை தமிழர்கள் உணர வேண்டும் .

 • en thaai thamizh wrote on 26 July, 2017, 9:21

  ஐயா iraama thanneermalai அவர்களே -நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை– நானும் ஒருகாலத்தில் திராவிடத்தை ஆதரித்தவன் தான் – பிறகு சிந்தித்ததில் நாம் தான் திராவிடத்ததை பற்றி பேசுகிறோம் ஆனால் மற்ற “திராவிடர்களுக்கு” தாம் திராவிடர்கள் என்றே தெரியவில்லை- இன்றும் தமிழ் நாட்டில் அதை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருக்கின்றனர்- நாம் தமிழர் கட்சி உயிரோடு இருக்கிறதா என்றே தெரிய வில்லை.

 • abraham terah wrote on 26 July, 2017, 11:01

  தமிழ் நாட்டில் யாரும் கட்டிக்கொண்டு அழவில்லை, நண்பரே! தமிழ் நாட்டில் உள்ள திராவிடர்களுக்கு அது தேவைப்படுகிறது, அவ்வளவு தான்!

 • தேனீ wrote on 26 July, 2017, 22:53

  “ஆனால் புத்தி சொல்லும் தன்மையை தாம் கடைப்பிடிக்க முடியுமா”

  சுயமரியாதை என்று சொன்ன கலைஞர் வீட்டு அம்மா, மகன், மகள் என்று ஒவ்வொருவரும் தேர்தலில் வெற்றி பெற கோயில் கோயிலாகச் சென்று யாகம் நடத்தி விட்டு வந்தார்கள்!.

  சாதி இல்லை என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு அனைவருக்கும் சாதி சான்றிதழ் கொடுத்தது சுயமரியாதை இயக்கத்தின் வழி வந்த அரசாங்கம்தான்.

  கால மாற்றத்திற்கு ஏற்றவாறு சுயமரியாதை இயக்கத்திற்கு குறியும் நெறியும் இல்லாமல் போய் விட்டது. அதனால் தமிழரும் இவ்வகைக் கூட்டத்தின் பின்னால் சென்றால் தம் இலக்கை அடைய முடியாது என்று எண்ணி விலகி விட்டனர்.

  குற்றம் அவர் மீது இருப்பதை அறியாது பிறர் மீது பாய்வதால் பயன் ஒன்றுமில்லை. உண்மை சுடும் போது மனம் ஏற்காது.

 • TAPAH BALAJI wrote on 27 July, 2017, 12:14

  தேனீ ! உங்கள் கருத்து ஆதரிக்கவேண்டிய ஒன்று. இன்றய சூழ்நிலையில் மதங்களை சீர்திருத்தம் செய்வதை விட்டு, அதற்கு பதிலாக இன்று நமது இளைஞர்களை சீரழிக்கும் குண்டர் கும்பல் சகவாசத்தை ஒழிக்க பாடுபடலாம். ஹும்……ஏழை சொல் அம்பலமேறாது!!

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)