டாக்டர் மகாதீரைத் தாக்கிய சந்தேக நபருக்கு இலவச ‘பெர்சத்து’ டி-சட்டை

3டாக்டர் மகாதீரைக் காயப்படுத்த எண்ணிய சந்தேக நபருக்கு, பெர்சத்து கட்சியின் ஆர்மாடா டி-சட்டை இலவசமாகக் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இன்று, ஷா ஆலாமில் ‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக, அச்சட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

தாங்கள் ஏற்பாடு செய்திருந்த மண்டபத்திற்குள் நுழைய ஏதுவாக, கலகக்காரர்கள் அச்சட்டைகளை அணிந்திருக்கலாம் என ஆர்மாடா தலைவர் ஷேட் சட்டிக் அப்துல் ரஹ்மான் கூறினார்.

அதுமட்டுமின்றி, பெர்சத்து தலைவர் டாக்டர் மகாதீரைக் காயப்படுத்தும் நோக்கத்துடனேயே அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சி   இரத்தானதற்குப் பின் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், பெர்சத்து இளைஞர் பிரிவின் தலைவருமான ஷேட் சட்டிக், காவல்துறையின் முதற்கட்ட விசாரணையும் இதனையேக் காட்டுவதாக் கூறினார். கலகக்காரர்கள் அணிந்ததாக நம்பப்படும் சிவப்பு நிற சட்டைகளும் செய்தியாளர் சந்திப்பின் போது, உடன் கொண்டுவரப்பட்டன.

நிகழ்ச்சியில் கலவரம் செய்ததாக நம்பப்படும், காயப்பட்டிருந்த மூவரைப் பிடித்து, பெர்சத்து ஆதரவாளர்கள்  4 காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 17-லிலிருந்து 19 வயதுக்குட்பட்ட அம்மூவரில், இருவர் ஆர்மாடா பெர்சத்து டி-சட்டை அணிந்திருந்தனர்.

இன்றைய ‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்ச்சி மதியம் 3 தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவு பெறவிருந்தது. இருப்பினும், சுமார் 5.30 மணியளவில், ‘மெமாலி சம்பவம்’ குறித்த வருகையாளரின் கேள்விக்கு, டாக்டர் மகாதீர் பதிலளிக்கையில் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

காலணி, போத்தல், நாற்காலி போன்றவற்றால் மகாதீர் தாக்கப்பட்டதாகவும், ஆனால், பாதுகாவலர்களின் உதவியால் அவருக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் தெரிகிறது.

இச்சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்கள் பற்றிய தகவல் சரிவர தெரியவில்லை.