ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திருப்பம்.. வெடிகுண்டு பின்னணி பற்றி உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

supreme-court-rajiv-gandhiடெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை தயாரித்தது யார் என்று அறிக்கையில் தெரிவிக்காதது ஏன் என்று எம்டிஎம்ஏவிற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது குண்டுவைத்து வெடிக்கச் செய்து படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கை சிபிஐ விசாரித்தது.

ராஜீவ் காந்தி கொலை சதித் திட்டத்தின் பின்னணி குறித்து விசாரிக்க 1999ஆம் ஆண்டு எம்டிஎம்ஏ (Multi Disciplinary Monitoring Agency) என்ற விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டுச் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் 1999ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் அர்ஜூன்சிங் பாஜக மூத்தத் தலைவர் அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானிக்கு எழுதிய கடிதத்தில் எம்டிஎம்ஏ அமைப்பின் செயல்பாடுகள் குறித்து எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்டிஎம்ஏ என்பது தனி அதிகாரம் பெற்ற ஆணையமாக செயல்பட வேண்டும் என்றும் அர்ஜூன்சிங் கோரியிருந்தார்.

இந்நிலையில் எம்டிஎம்ஏ விசாரணை அறிக்கையை கோரி ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையிலுள்ள பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது எம்டிஎம்ஏ அறிக்கையில் ராஜீவ் காந்தியை கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எப்படி தயாரிக்கப்பட்டது என்று குறிப்பிடப்படாதது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் எம்டிஎம்ஏ அறிக்கையில் வெடிகுண்டு குறித்து 17 ஆண்டுகளாக நடத்தும் விசாரணையில் ஏன் தெரிவிக்கவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். இதுவரை எம்டிஎம்ஏ நடத்திய விசாரணையின் முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 23க்குள் எம்டிஎம்ஏ தனது முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. ராஜீவ் காந்தி கொலையில் சிறையில் உள்ள பேரறிவாளன் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சிறையில் உள்ளார். பேட்டரி வாங்கி கொடுத்தவர் சிறையில் இருக்கும் நிலையில் வெடிகுண்டு தயாரித்தது யார் என்று இது வரை விளக்கம் அளிக்கப்படாதது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேட்டுள்ளதால் ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: