தாக்குதலை தள்ளி வைத்துக் கொள்கிறேன் கிம்: புத்திசாலித்தனமான முடிவு என டிரம்ப் மகிழ்ச்சி

வடகொரிய அதிபரான கிம் ஜங் உன் தாக்குதலை தற்போதைக்கு தள்ளி வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளதால், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு என்று கூறியுள்ளார்.

வடகொரியாவின் செயல்காளால் கடும் அதிருப்தியான அமெரிக்கா, அந்நாட்டின் மீது ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. அந்த தீர்மானமும் ஐ.நாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதால், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

இதற்கு வடகொரியா இறையாண்மைக்கு எதிரானது என்று கூறியது. அதுமட்டுமின்றி அமெரிக்காவுக்கு சொந்தமான வடகொரியாவிற்கு அருகேயுள்ள குவாம் தீவை 4 ஏவுகணைகளை வைத்து தாக்கப் போவதாக கூறியது. இதனால் அங்கிருக்கும் மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் குவாம் தீவை தாக்குவதற்கு தயாராக நிறுத்தப்பட்டு இருந்த 4 ஏவுகணைகளையும் வாபஸ் பெறும்படி உத்திரவிட்டுள்ளதாகவும், தாக்குதலை தள்ளி வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இது ஒரு நியாயமான முடிவு. இந்த மாற்றத்தை வரவேற்கிறேன். இதன் மூலம் பேரழிவும், ஏற்று கொள்ள முடியாத செயலும் நிறுத்தப்பட்டு இருப்பதாக கருதுகிறேன், வடகொரியா அதிபர் புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

-lankasri.com