கமலநாதன் – தமிழ்க்கல்வியின் அழிவுக்குத் துணை போகலாமா?

dlp memo3இன்று காலை நாம் தமிழர் அமைப்பின் தலைமையில் இரு மொழிக்கொள்கைக்கு எதிராக மூன்றாவது முறையாக அரசாங்கத்திடம் மனு வழங்கப்பட்டது.

தமிழ்மொழிக்கல்விக்கும், தமிழ் வழிக்கல்விக்கும் ஆபத்தாக அமையும் டிஎல்பி (DLP) என்ற அரசாங்கத்தின் திட்டம், கொல்லைப்புறமாக திணிக்கப்பட்டு வருகிறது. அதை நாங்கள் அரசியல் ஆக்க விரும்பவில்லை, எனவே உடனடி தீர்வாக திட்டத்தைத் தமிழ்ப்பள்ளிகளில் இருந்து அகற்ற வேண்டும் எனக் கேட்டு கொள்ளப்பட்டது.

இந்தத் திட்டம் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உகந்த திட்டம் அல்ல. இதன் அமுலாக்கம் குழந்தைகளின் அறிவுத்திறனை அதிகரிக்காது. அதோடு அவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் ஆகியவற்ற புரியாத மொழியில் கற்றுக் கொள்ள இயலாத சூழலில் கல்வியில் மேலும் பின்தள்ளப்படுவர் என்ற வாதத்தை சான்றுகளோடு சமர்பித்த குழுவின் பிரதிநிதி, மு. அ கலைமுகிலன், அரசாங்கம் ஒரு நல்ல முடிவை எடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

dlp moe3இதற்கு முன்பு இருமொழித்திட்டத்தை அகற்ற கோரி,  07.02.2017-இல் ஒரு மனுவும் 19.05.2017-இல் இன்னொரு மனுவும் கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டது. இந்த மூன்றாவது மனு பிரதமருக்கு வழங்கப்பட்டது என்கிறார் இதன் ஏற்பாட்டாளர்களின் ஒருவரான தமிழ் அறவாரியத்தின் உதவித் தலைவர் பொன்ரங்கன்.

மேலும், “பிரதம இலாகாவின் சார்பில் தனசீலன் மற்றும் நாகையா ஆகிய இருவரையும் சந்தித்து, நாங்கள் ஒரு மணி நேரம் பேசினோம், எங்களை மீண்டும் சந்திக்க ஆவல் கொண்டுள்ளனர்” என்றார்.

இதில் கலந்து கொண்ட முரளி, இந்தப் பிரச்சனையை எளிதாக கையாள சூழல் இருந்தும், தமிழர்களை கொண்டு அரசியல் நடத்தும் அரசியல் தலைவர்கள் வக்கற்றவர்கள் எனச் சாடினார். கல்வி துணை அமைச்சர் கமலநாதன் இந்தப் பிரச்சனையை கையாளும் விதம் வேடிக்கையானது என்றார்,

“இது பெற்றோர்கள் விருப்பத்தின் பேரில் ஆர்வம் கொண்டவர்களுக்காக உள்ள திட்டம்” என்று புறமுதுகு காட்டும் இவர் நேரிடையாகவே இந்த திட்டதிற்கு ஊக்குவிப்பு வழங்கி துணை போவது அருவருப்பாக உள்ளது என்கிறார். தமிழ்க் கல்வியின் அழிவுக்குத்  துணை போகும் அரசியல்வாதிகளை மக்கள் நிராகரிக்க தேர்தல் பிரச்சாரம் தேவை எனக் கோடிகாட்டினார்.

மேலும், இதைப்பற்றி கருத்துரைக்கையில், சுமார் 40 தமிழ்ப்பள்ளிகளில் அமுலாக்கப்பட்டுள்ள இந்த இருமொழித்  திட்டம் பெரும்பாலான குழந்தைகளின் புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்டது என்பதால், அது தேவையற்றது. ஆனால், தமிழ்ப்பள்ளிக்கு காவலன் என பறைசாற்றும் மஇகா தொடர்ந்து மௌனமாக அரசியல் விளையாடுவது வேடிக்கையாக உள்ளது, என்றார்.

dlp moe4தற்போதைய மஇகா தலைவர்கள் இந்த இருமொழித் திட்டம் சார்பாக இன்னமும் ஏனோதானோ என்று அமைதிகாப்பது வேடிக்கையாகவே உள்ளது. அவர்களின் அமைதி தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்தாக அமையும் என்பது அவர்களுக்குத்  தெரியாதா என கேள்வி எழுப்புகிறார் மே 19 இயக்கத்தின் தியாகு.

“இது என்ன ஒரு பெரிய ராக்கெட் அறிவியலா, மஇகா ஆழ்ந்த அமைதியில் பரிசீலனை செய்யவும் ஆய்வு நடத்தவும்?”,   என சாடுகிறார் இதில் கலந்து கொண்ட கௌத்தம்.

dlp  moe2இருமொழித் திட்டத்தில்   கற்பித்தலுக்கு ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றுவிக்கப்படவில்லை, பள்ளிகளில் போதுமான பயிற்றுத் துணைப் பொருள்களோ, கருவிகளோ, மேற்கோள் நூல்களோ இல்லை. எனவே, இது மாணவர்களின் எதிர்காலத்தைப் பெரிய அளவில் பாதிப்படையச் செய்வதோடு கணிதம், அறிவியல் பாடங்களில் குழந்தைகளுக்கு வெறுப்பையே உண்டுபண்ணும். ஆங்கில மொழியறிவு இல்லாத குழந்தைகள், இந்தப் பாடங்களை சிறப்புடன் கற்றுத்தேர முடியாது என்பது போன்ற எளிமையான காரணங்கள் கூடவா புரியவில்லை? என்ற கேள்விகளை முன்வைக்கிறார் இதில் கலந்துகொண்ட  மே 19 இயக்கத்தின் பாலமுரளி.

இன்றைய நிகழ்ச்சியில், தமிழ் தேசிய ஆதரவாளர் சாமூவேல் இராஜ், மலேசிய தமிழன் உதவும் கரங்கள் தலைவர் முரளி, சுவராம் இயக்குனர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம், தமிழ் அறவாரியத்தின் செயலவை உறுப்பிணர் ஜிவி காத்தையா, மே 19 இயக்கத்தின் தமிழ் இணியன்  ஆகியோர் உட்பட சுமார் இருபது நபர்கள் கலந்து கொண்டனர்.