டிஎல்பி சந்திப்பில் அரசு தரப்பில் ஒரு கேள்வி: “ஒரு பிள்ளைக்கு இரு தாய்மார்கள் இருக்கலாமா?”

 

Notodlpஇரு மொழித் திட்டத்திற்கு (டிஎல்பி) எதிர்ப்பு தெரிவிக்கும் மகஜர் புத்ரா ஜெயாவில் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் மு. அ. கலைமுகிலன், தமிழ் அறவாரியத்தின் உதவித் தலைவர் எம். பொன்ரெங்கன் மற்றும் வீ. பாலமுருகன் ஆகியோர் அடங்கிய குழுவினரால் பிரதமர் அலுவலக மற்றும் செடிக் ஆகியவற்றின் அதிகாரிகளிடம் இன்று காலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த சந்திப்பின் போது கொடுக்கப்பட்டது.

இந்த மகஜரை பிரதமர் நஜிப்பிடம் நேரடியாக கொடுக்கும் திட்டம் இருந்ததாகவும், ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இல்லாததால், பிரதமரின் சிறப்பு அதிகாரியிடம் கொடுக்கப்பட்டதாகவும் கலைமுகிலன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பிரதமர் அலுவலக அதிகாரியிடம் கொடுக்கப்பட்ட மகஜரில் இந்த ஒரு மொழித் திட்டால் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏற்படப்போகும் விளைவுகளை அரசு அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறியதாக கலைமுகிலன் தெரிவித்தார்.

இரு மொழித் திட்டம் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டதாக கலைமுகிலன் மேலும் கூறினார்.

இந்த விவகாரத்தில் அரசும் ஈடுபாடு கொண்டுள்ளது என்பதை வலியுறுத்திய செடிக் அமைப்பின் அதிகாரி நாகையா, “ஒரு பிள்ளைக்கு இரு தாய்மார்கள் இருக்கலாமா?”, என்று அச்சந்திப்பில் கேட்டார் என்று கலைமுகிலன் தெரிவித்தார்.

(ஒரு பிள்ளைக்கு இரு தாய்மார்கள் இருக்க முடியாது என்று கூறுவது ஒரு பிள்ளைக்கு இரு மொழிகளில் (ஒன்று அந்நிய மொழியாகத்தான் இருக்க வேண்டும்) கற்பிக்கக்கூடாது என்பதற்கு சமமாகும் என்று நாம் கருத வேண்டியிருக்கும்.

இந்நிலைப்பாடு உண்மை என்றால், ஐநாவின் யுனெஸ்கோ கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் பிள்ளைகளுக்கு தாய்மொழியில்தான் கற்பிக்க வேண்டும் என்ற அதன் பரிந்துரைகளுக்கு வலுவூட்டுவதாக இருக்கிறது! இது பழம் நழுவி பாலில் பாலில் விழுவதாக இருக்கிறது … அல்லது வேறெதிலும் விழும் என்பதற்கான சமிக்கையோ?)

இந்தச் சந்திப்பில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றம் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அடுத்தச் சந்திப்பிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கலைமுகிலன் மேலும் கூறினார்.