ஷாஹிட் : குற்றச்சாட்டுகளைப் பிரதமர் தனிஒருவராக எதிர்கொள்ள அனுமதிக்காதீர்கள்

zahid-najibஎதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகளை, பிரதமர் நஜிப் தனி ஒருவராக சமாளிக்க விடக்கூடாது எனத் துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடி நாட்டு மக்களைக், குறிப்பாக அம்னோ உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் நஜிப் மக்கள் நலனுக்காகப் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டு வர பாடுபடுகிறார். இதனை உணராமல், எதிர்க்கட்சியினர் அவரைக் குறைகூறி வருகின்றனர் என்று ஷாஹிட் கூறினார்.

“ நமது பிரதமரைத் தனிஒருவராக விடாதீர்கள். அவர் செய்வது எல்லாம் நாட்டு மக்கள், குறிப்பாக, அம்னோ உறுப்பினர்கள் நலன் கருதியே என்பதை நாம் உணர வேண்டும்,” என, இன்று கூலிம்/பண்டார் பாரு அம்னோ பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்து துணைப் பிரதமர் பேசினார்.

முன்னாள் அம்னோ தலைவர் ஒருவர் கூறிவரும் குற்றச்சாட்டுகளை அம்னோ உறுப்பினர்கள் பொருட்படுத்தக் கூடாது. இன்றைய அரசியல் சூழலுக்கு அவர் பொறுத்தமில்லாதவர். அம்னோ மற்றும் தேசிய முன்னணியை, இப்போது நம்முடன் இருக்கும் தலைவர்கள் நிர்வகிப்பதை நாம் உறுதி செய்ய வேண்டுமெனவும் ஷாஹிட் தமதுரையில் கூறினார்.

‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்வில் நடந்த வன்முறைக்கு, அம்னோவைக் குறை சொல்வதைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென ஷாஹிட் தெரிவித்தார்.

இந்த விஷயத்தில், அம்னோ குற்றம் சாட்டப்படுவதை தான் விரும்பவில்லை எனவும், உள்துறை அமைச்சர் என்ற முறையில், அச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள காவல்துறையினரைப் பணித்துள்ளதாகவும் ஷாஹிட் மேலும் கூறினார்.