ஐரோப்பாவை மீண்டும் அதிர வைத்துள்ள ஐ.ஸ் பயங்கரவாதம்!

ஐரோப்பா முழுவதும் ஐ.எஸ் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நிலையில், மற்றுமொரு கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவில் நேற்று பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிக மக்கள் செறிவான பகுதியில் வைத்து வேன் ஒன்று மோதியதில் 13 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அதிகளவானோரை கொலை செய்யும் நோக்கில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லாஸ் ரம்லாஸ் என்ற பிரதேசத்தில் திரண்டிருந்த மக்கள் மீது வேனில் வந்த ஒருவர் மோதியிருக்கிறார். இந்தப் பகுதி புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும்.

20 வயதுடைய நபர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் தொடர்பான புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பயன்படுத்திய அந்த வாகனம் பார்சிலோனா நகரில் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக தேசிய ஊடகமான ஸ்பானிஷ் ரேடியோ டெலிவிஷன் கார்ப்பரேஷன் (RTVE) தகவல் வெளியிட்டுள்ளது.

ட்ரிஸ் ஒவ்பக்கீர் என்பவரது ஆதாரங்களை வைத்து வேன் வாடகைக்கு எடுக்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

இதுவொரு பயங்கரவாத தாக்குதல் என ஸ்பெயின் பிரதமர் அறிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்பெயின் கேம்ப்ரில்ஸ் நகரில் இதே போன்று நடக்கவிருந்த இரண்டாவது வான் மோதல் தாக்குதலை தடுத்து நிறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொள்ள தயாராக இருந்த ஐந்து பேரை சுட்டுக் கொலை செய்ததாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் வெடிகுண்டு அங்கிகளை அணிந்திருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்சிலோனாவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள அல்கனார் நகரில் புதன்கிழமை ஒரு வீடு வெடித்துச் சிதறியது. இது நேற்றைய பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் ஒரு நபர் இறந்தார்.

அந்த வீட்டில் இருந்தவர்கள் வெடிகுண்டு தயாரித்துக்கொண்டு இருந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

வெடித்து எரிந்து போன வீட்டில் ஏராளமான புரோபேன் வாயுக் குடுவைகள் இருந்ததாகவும், தாக்குதலுக்கான வெடிகுண்டு தயாரிக்க இவை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸ்துறை தலைவர் ஜோசஃப் லியுஸ் ட்ரப்பெரோ கூறியுள்ளார்.

இந்தத் கொடூர தாக்குதலை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஐரோப்பா முழுவதும் ஐ.எஸ் பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், பிரித்தானியா போன்ற நாடுகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com