எங்களின் இலக்கு அமெரிக்கா மட்டும் தான்: கொக்கரிக்கும் வடகொரியா

தங்களின் அணு ஆயுத சோதனைகளைக் கண்டு உலக நாடுகள் பதற்றமடைய தேவையில்லை எனவும், தங்களின் இலக்கு அமெரிக்கா மட்டும் தான் எனவும் வடகொரியா அறிவித்துள்ளது.

அணு ஆயுதங்கள் அனைத்தும் அமெரிக்காவை குறிவைத்துதான் உருவாக்கப்பட்டுவருகிறது. எனவே, இதனால் உலகின் மற்ற நாடுகள் பதற்றமடைய வேண்டாம் என வடகொரியா அறிவித்துள்ளது.

அமெரிக்கா தொடர்ந்து மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்திவருகிறது. எனவே அமெரிக்கா எங்களை தாக்க முனையும்பட்சத்தில் நாங்கள் எதிர்த்தாக்குதல் நடத்துவோம்.

எங்களை சீண்டாதவரையில் எந்த ஒரு நாட்டின் மீதும் அணு ஆயுதத்தாக்குதல்களை நடத்த மாட்டோம் எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி தென்கொரியாவுடன் அமெரிக்காவின் ராணுவ கூட்டுப்பயிற்சியானது அணுவாயுத போரை நிர்பந்தித்து திணிக்கும் முயற்சியாகும்.

வடகொரிய ராணுவம் எந்த நேரத்திலும் அமெரிக்காவை இலக்கு வைக்க தயார் நிலையில் உள்ளது. அது குயாம் தீவாக இருக்கலாம் அல்லது ஹவாய் தீவாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரு நாட்டுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சீனா தலையிட்டு இரு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கடி நிலையை தணிக்க முயற்சி மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டது.

கடந்த வாரம் குயாம் தீவு மீது தாக்குதலை தொடுக்க வடகொரியா ஆயத்த நிலையில் இருப்பதாக அறிவித்தது. பின்னர், அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்தே வடகொரியாவின் நடவடிக்கை இருக்கும் என அந்த நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன் அறிவித்தார்.

தற்போதைய சூழலில் அமெரிக்கா மற்றும் தென் கொரிய ராணுவ கூட்டுப்பயிற்சியை கடுமையாக எதிர்க்கும் கிம் ஜோங் அரசாங்கம், இது நெருக்கடி நிலையை மேலும் அதிகரிக்கவே செய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வடகொரிய ராணுவம் எந்த சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருப்பதாக கிம் ஜோங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் தென் கொரியாவில் அமெரிக்க ராணுவம் போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருவதாகவும், எந்த நேரத்திலும் வான் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

-lankasri.com