14-வது பொதுத் தேர்தலில், ம.இ.கா. பக்காத்தானுடன் இணையும் சாத்தியம் உண்டு?

subra & palaniஎதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், ம.இ.கா. பக்காத்தானுடன் இணையும் சாத்தியம் இருப்பதை மறுப்பதற்கில்லை என, ம.இ.கா. தகவல் பிரிவின் முன்னாள் தலைவர் எல்.சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.

தற்போது நெருக்கடியில் இருக்கும் ம.இ.கா.-வின் வழக்கு, அதன் முன்னாள் தேசியத் தலைவர் ஜி.பழனிவேலுவுக்குச் சாதகமாக போகும் பட்சத்தில், ம.இ.கா. பக்காத்தானுடன் கைக்குழுக்கும் சாத்தியம் ஏற்படலாம் என அவர் கூறியுள்ளார்.

இது வெறும் அனுமானமே, பெரும்பான்மை ம.இ.கா. உறுப்பினர்கள் அம்னோவின் இனவாத அரசியலைச் சகிக்கமுடியாமல், அதன் உறவை முறித்துக்கொண்டால் இவ்வாறு நடக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“பிரதமர் நஜிப் மற்றும் அம்னோவின் ஒருசில மேல்மட்டத் தலைவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லாமே இனவாத அரசியலையே முன்னெடுத்துச் செல்கின்றனர்,” என்றார் அவர்.

இந்திய வாக்காளர்கள் ஆர்யுயு355, கட்கோ, சட்டப்பிரிவு 164, திருவள்ளுவர் சிலை மற்றும் அம்னோ தலைவர்கள் சிலரின் இனவாதத்தைத் தூண்டும் அறிக்கைகளால் அம்னோ மீது கோபமடைந்துள்ளனர்.

“எனவே, பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் அதுவென்றால், 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்துடன் ஒத்துழைப்பதில் தவறில்லை என்பது என் தனிப்பட்டக் கருத்து,” என்று அவர் பெரித்தா டெய்லி இணையப் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார்.

மகாதீரின் அழைப்பு பற்றி கூறுகையில், “டாக்டர் மகாதீர் எங்களை அழைத்தது உண்மையே. நாட்டின் முன்னாள் பிரதமர் எனும் முறையில், மரியாதை நிமித்தம் அவரைச் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்தியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அவர் தயாராக இருந்தால், அவருக்கு ஆதரவு கொடுப்பதில் எங்களுக்குப் (பழனிவேலு தரப்பு) பிரச்சனையில்லை என்று நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.

“இந்திய வாக்காளர்களின் தேவையை அவர் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே நிபந்தனை. ஒருவேளை, நஜிப் இன்னும் சிறப்பானதை இந்தியர்களுக்கு வழங்க முன்வந்தால், பாரிசானிலேயே நிலைத்து நிற்கும் சாத்தியமும் உண்டு. இந்தியர்களுக்கு இந்தத் தலைவர்கள் சிறந்ததைக் கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்று அவர் மேலும் கூறினார்.

பொதுவாக, டாக்டர் மகாதீரும் நஜிப்பும் இந்தியர்களின் மேம்பாட்டிற்குச் சிறந்ததொரு பங்களிப்பைச் செய்துள்ளனர், ஆனால், ம.இ.கா. தலைமைத்துவமே அதனைப் பாழாக்கியது என்றார் அவர்.

“எனவே, ம.இ.கா. பாரிசான் அல்லது பக்காத்தான் – எந்தக் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தாலும் அது தவறில்லை.”

கடந்த வாரம், ஹிண்ராப்ட் தலைவர் வேதமூர்த்தியைச் சந்தித்த மகாதீர், ம.இ.கா. உட்பூசலின் காரணமாக, mahathirஉறுப்பினர் தகுதியை இழந்த பழனிவேலு தரப்பினரைச் சந்திக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.

ம.இ.கா.-வின் ஆதரவு பக்காத்தானுக்கா அல்லது பாரிசானுக்கா என்று கேட்டதற்கு, பழநிவேலு மற்றும் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இடையிலான வழக்கு விசாரணையின் முடிவு அதனைத் தீர்மாணிக்கும் என்று சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.

வழக்கில் பழனிவேலுவின் தரப்பு பலமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

“ஒருவேளை வழக்கில் நாங்கள் வெற்றி பெற்றால், பழனிவேலு மீண்டும் ம.இ.கா. தலைவராக பதவியேற்பார். அந்நேரத்தில், ம.இ.கா. பக்காத்தானுடன் இணையும் வாய்ப்பு உள்ளது,” என்றார் சிவசுப்ரமணியம்.

அவரின் கூற்றுப்படி, ம.இ.கா. உட்பூசலுக்குப் பின், 40-க்கும் மேற்பட்ட தொகுதி தலைவர்கள் (முன்னாள்), 800-க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்கள் (முன்னாள்) இன்னும் பழனிவேலுவுக்கு ஆதரவாக உள்ளதாகத் தெரிகிறது.