பழிவாங்கும் நடவடிக்கை; மியான்மரில் இனப்படுகொலை நடக்கிறது – வங்காளதேசம் எதிர்ப்பு

rohing2மியான்மர் நாட்டில் ராகினே மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் ஏராளமாக வசித்து வருகின்றனர். அவர்கள் அந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்களா, வங்காளதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களா என்பதில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

இந்த இன மக்களுக்கு அங்குள்ள அரசு குடியுரிமை வழங்கவில்லை. அதே நேரத்தில் அவர்கள் மீது மியான்மர் அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. அந்த ரோஹிங்யா முஸ்லிம் மக்களிடையே ‘அரகன் ரோஹிங்யா சால்வேன் ஆர்மி’ (அர்சா) என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் குழு உருவானது. இந்த கிளர்ச்சியாளர்கள் குழுவினர், கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந் தேதி அந்த நாட்டின் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து ரோஹிங்யா கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே பெரும் சண்டை மூண்டது.

இந்த சண்டையின் காரணமாக அப்பாவி ரோஹிங்யா முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டனர். அவர்களும் தாக்குதலுக்கு ஆளாகினர். ராணுவமும், ராக்கின் மாகாணத்தில் வசிக்கிற புத்த மத மக்களும் தங்களுக்கு எதிராக மிகக்கடுமையான தாக்குதலை நடத்தி வருவதாகவும், தங்களது கிராமங்களை எரித்து வருவதாகவும் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இதை மியான்மர் அரசு நிராகரித்துள்ளது. ‘‘ரோஹிங்யா பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் சண்டையிடுகிறது’’ என்று அரசு தரப்பில் கூறுகின்றனர். இந்த சண்டையில் 400 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு சொல்கிறது.

இந்த நிலையில், ராக்கின் மாகாணத்தில் வசித்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் உயிருக்குப் பயந்து அங்கிருந்து கால்நடையாகவும், படகுகள் மூலமாகவும் வங்காளதேசத்துக்கு சென்று தஞ்சம் அடையத் தொடங்கினர். அங்கு சுமார் 3 லட்சம் மக்கள் சென்று அடைந்து விட்டனர். அவர்கள் அங்கு காக்ஸ் பஜார் பகுதியில் முகாமிட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் செய்து தருவதற்கு 77 மில்லியன் டாலர் (சுமார் ரூ.500 கோடி) தேவை என ஐ.நா. சபை கூறுகிறது. வங்காளதேசம் மிகவும் நெருக்கடியான நிலையை சந்தித்து உள்ளது.

இந்நிலையில் வங்காளதேச வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது அலி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது இனப்படுகொலை என சர்வதேச நாடுகள் கூறுகின்றன. நாங்களும் அதனைதான் சொல்கிறோம்,” என்றார். ரோஹிங்யாக்குள் அரசியல் தீர்வு, மனிதநேய உதவிக்கு மேற்கத்திய நாடுகள், வளைகுடா நாடுகள் மற்றும் ஐ.நா.சபை பிரதிநிதிகளை முகமது அலி சந்தித்து பேசிஉள்ளார். “இப்போது இது ஒரு தேசத்தின் பிரசனையாகும்,” என கூறிஉள்ளார்.

இதற்கிடையே இப்போது மியான்மரில் நடைபெறும் வன்முறை சம்பவங்களில் சுமார் 3000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரோஹிங்யாக்கள் சட்டவிரோதமாக வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் பெங்காலி பயங்கரவாதிகள் என மியான்மர் போலி பிரசாரம் செய்வதாகவும் சாடிஉள்ளார் முகமது அலி. ராகினே மாகாணம் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதியாகும், அரபு மற்றும் இந்திய வம்சாவளி மக்கள் வாழ்ந்த பகுதியாகும் என கூறிஉள்ளார். ஆகஸ்ட் 25-ம் தேதி போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து மியான்மர் ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கையானது பழிவாங்கும் நடவடிக்கையாகும். அனைத்து மக்களையும் கொல்ல வேண்டும்? அனைத்து கிராமங்களும் எரிக்கப்பட வேண்டும்? இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறிஉள்ளார் முகமது அலி.

இவ்விவகாரத்தில் வங்காளதேசம் அமைதியான தீர்வையை கோருகிறது, மியான்மருக்கு எதிரான போரை கிடையாது எனவும் குறிப்பிட்டு உள்ளார். “நாங்கள் பிரச்சனையை உருவாக்கவில்லை. மியான்மரில் பிரச்சனை தொடங்கி உள்ளதால் அவர்கள்தான் அதனை சரிசெய்ய வேண்டும். நாங்கள் அவர்களுக்கு உதவ தயார் என கூறிவிட்டோம்.” என கூறிஉள்ளார்.

-dailythanthi.com