ஷரியாவில் தலையிட அனுமதிக்க முடியாது: அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்

muttalaakஇஸ்லாமியர்களின் தனிப்பட்ட சட்டத்தில் தலையிட மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அனுமதிக்கமுடியாது என்று அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் கூறியிருக்கிறது.

‘ஷரீயத் சட்டத்தில் தலையிட யாரையும் அனுமதிக்க முடியாது’ என்று போபாலில் ஞாயிறன்று நடைபெற்ற நீண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் செயற்குழு உறுப்பினர் கமால் ஃபாரூகி தெரிவித்தார்.

அரசியல் சாசனத்தின்படி பிற மதத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும், பாதுகாப்பும் முஸ்லிம்களுக்கும் கிடைக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதிருப்தி

இஸ்லாமிய திருமணங்களில், நீதிமன்றத்திற்கு செல்லாமலேயே விவாகரத்து செய்யப்படும் முத்தலாக் நடைமுறை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அறிவிக்கவேண்டும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது.

இது குறித்து இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது, “இது தங்களுடைய தனிப்பட்ட சட்டத்தின் மீதான தாக்குதல்” என்று கமால் ஃபாரூகி தெரிவித்தார்.

“முத்தலாக் விரும்பப்படுவதில்லை என்று கூறப்பட்டாலும் அது சட்டபூர்வமானது, அதை முறைகேடாக பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றும் வாரியம் கூறியிருக்கிறது.

இது தொடர்பாக குழு ஒன்றையும் அமைக்க வாரியம் முடிவு செய்திருப்பதாக கமால் கூறுகிறார். அந்தக் குழு, முத்தலாக் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்து, இஸ்லாமிய முறைப்படி தற்போதைய நடைமுறையில் தேவைப்படும் சீர்திருந்தங்களை பரிந்துரைக்கும்.

ஷரியத்துக்கு பெண்கள் ஆதரவளிக்கின்றனர்

பாபர் மசூதி விவகாரத்தில் எந்த விதத்திலும் அவசரமாக செயல்படக்கூடாது என்று அகில இந்திய முஸ்லீம் தனிப்பட்ட சட்ட வாரியம் கூறியிருக்கிறது.

“இது தொடர்பான விவகாரங்களில் அவசரம் கூடாது. யாருடைய பேச்சையும் கேட்டு முடிவெடுக்கக்கூடாது என்று வாரியம் முடிவெடுத்துள்ளது” என்று வாரியத்தலைவர் ஜஃபர்யாப் ஜிலானி தெரிவித்தார்.

தலாக் தொடர்பாக ஒரு சிலர் நீதிமன்றத்தை அணுகுவதற்கு அவர்கள் மதத்தினால் பாதிக்கப்பட்டது தான் காரணம் என்று கூற முடியாது என்கிறார் வாரியத்தின் உறுப்பினரும், மகளிர் குழுவின் ஒருங்கிணைபாளருமான அஸ்மா ஜெஹ்ரா.

பெரும்பான்மையான பெண்கள் ஷரியாத்துக்கு ஆதரவாக இருப்பதாகவும் அஸ்மா ஜெஹ்ரா கூறுகிறார். -BBC_Tamil

TAGS: