ஷைட் : இன அரசியல் நடத்தும் பாரிசானால் இந்தியர்களின் இன்னல்களைத் தீர்க்க முடியாது

zaid 1

பாரிசான் நேசனல் தலைமையிலான (பிஎன்) அரசாங்கத்தால், மலேசியாவின் ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள், குறிப்பாக இந்தியச் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியாது, ஏனென்றால், அது இன சார்புடையது என்று ஜனநாயச் செயற்கட்சியின் (ஜசெக) ஷைட் இப்ராஹிம் கூறுகிறார்.

இன்று, கோலாலம்பூர்-சிலாங்கூர் சீன மாநாட்டு மண்டபத்தில், ஹிண்ட்ராப் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நேர்மையுடன் அணுகப்பட வேண்டிய ஒன்று என்று அந்த முன்னாள் அமைச்சர் கூறினார்.

“அரசாங்கம் பணத்தை ஒதுக்கீடு செய்யலாம், கையேடுகளை விநியோகிக்கலாம், ஆனால், இந்தியச் சமுதாயத்தில் ஆழமாக வேறூன்றி இருக்கும் பிரச்சனைகளை அது தீர்க்காது,” என்றார் அவர்.

அரசியல்வாதிகளால் உருவாக்கப்படும் கொள்கைகள், அரசாங்க ஊழியர்களால் நடைமுறைபடுத்தப்படுகின்றன. இனவாத சார்பு உடையவர்களின் ஊடுருவல் அவர்களிடையே இருந்தால், பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், தொடரும்.

“அதனால்தான், அரசாங்கத்தை மாற்ற வேண்டும். குறுகியப் பார்வையுடைய மக்கள் அரசாங்கத்தில் இருக்க முடியாது, இது அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்,” என்று அவர் கூறினார்.

“முதலில் இதற்கு தடையாக இருக்கும் பாரபட்சம் மற்றும் கருத்து வேறுபாடுகளைக் களைய வேண்டும். இந்தியர்கள் போராடத் தயாராகவில்லை என்றால், எதுவுமே மாறாது,” என்று புத்ராஜெயாவை நோக்கி பக்காத்தான் எனும் கருத்தரங்கில் பேசிய அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தை மாற்ற, பக்காத்தானுக்கு வாக்களிக்குமாறு ஷைட் இந்திய சமூகத்தைக் கேட்டுக்கொண்டார்.

“பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள், ஏழ்மையை ஒழிக்க உதவுவார்கள் என நான் நம்புகிறேன். பாரிசான் தலைவர்களைவிட, ஹராப்பானில் உள்ளவர்கள் ஏழைகளின் பிரச்சனைகளை நன்கு உணர்ந்தவர்கள் என நான் நம்புகிறேன்,” என ஷைட் கூறினார்.

“பாரிசான் தலைவர்கள் கோடிஸ்வரர்கள், அவர்களுக்கு இது புரியாது,”

harapanபுத்ராஜெயாவின் செலவுகள் குறித்து பேசுகையில், “இன்று நாட்டில் எழுந்துள்ள பல பிரச்சனைகளுக்குத் தனியார் ஜெட், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் மெகா உள்கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவையே காரணம்,” என்றார்.

“நாம் வல்லரசு அல்ல, நமக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் தேவையில்லை. நீர்மூழ்கிக் கப்பல்களை விற்றால்,  நமக்கு ரிம400 -லிருந்து ரிம500 மில்லியன் வரை கிடைக்கும்,” என அவர் தெரிவித்தார். நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான பராமரிப்பு செலவுகள் வருடத்திற்கு ரிம 3 மில்லியன் ஆகிறது.

“அந்தப் பணத்தில் இந்தியச் சமூகத்திற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்தப் பணத்தில் பள்ளிகள் திறக்கலாம், வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம், குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி வழங்க இயலாதப் பெற்றோர்களுக்கு உதவலாம்.”

ரிம 55 பில்லியன் செலவில் உருவாகும் கிழக்குக் கடற்கரை இரயில் இணைப்புப் பாதை குறித்து பேசுகையில், “அரசாங்கம் அதனைப் பாதி செலவில் கட்டி முடிக்கலாம், மீதி பணத்தை மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குச் செலவிடலாம்,” என்றார்.

“எதிர்பார்ப்பு குறைவாக இருக்கையில், மாற்றம் ஏற்படும். ஒன்றாக அணி திரண்டு, பணியாற்ற வேண்டிய நேரம் இது,” என்றும் அவர் கூறினார்.

கடந்த மாதம், ஹராப்பான் தேசியத் தலைவர் டாக்டர் மகாதீருடன் நடந்த பேச்சு வார்த்தையில், ஹிண்ராப்ட் தலைவர் வேதமூர்த்தி, மலேசிய இந்தியர்கள், குறிப்பாக பி40 குழுவினர், தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதை வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் தொகையில், இந்தியர்களின் பிரதிநிதித்துவம் 7% மட்டுமே  என்றாலும், கடந்த இரு பொதுத் தேர்தல்களில் அவர்களின் வாக்குகள் முக்கியமான ஒன்றாக இருந்ததை மறுக்க இயலாது. பாரிசான் மற்றும் எதிர்க்கட்சி என இருதரப்பினரும் இந்தியர்களின் பிரபலமானத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

14-வது பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள வேளையில், ஆளும் தரப்பினரும் எதிர் தரப்பினரும், மீண்டும் இந்தியர்களின் ஓட்டுகளைக் கைப்பற்றுவதற்கான உத்திகளைத் திட்டமிடத் தொடங்கிவிட்டனர்.

13 –வது பொதுத் தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே, வேதமூர்த்தி மற்றும் நஜிப் நிர்வாகத்திற்கு இடையேயான ஒப்பந்தத்தில் ஏற்பட்ட ஒரு வீழ்ச்சி, இம்முறை பாரிசானுக்கு ஒரு சரிவாக மாறக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

கடந்த ஏப்ரலில், இந்தியர்களை, குறிப்பாக, பி40 வர்க்கத்தினரை இலக்காகக் கொண்டு, மலேசிய இந்தியர் புளூபிரிண்ட் (எம்.ஐ.பி)-யைப் பாரிசான் அரசாங்கம் தொடங்கியது.

இதைப் போன்றதொரு பெருந்திட்டத்தைப் பக்காத்தான் ஹராப்பானும் வடிவமைத்து வருகிறது.