தமிழ் மக்களை சிறிலங்கா அரசு நம்பவில்லை – விக்னேஸ்வரன்

cm vikneswaranவடக்கில் இராணுவத் தளங்களை மூடுவதற்கு மறுப்பதானது, தமிழ் மக்களை சிறிலங்கா அரசாங்கம் நம்பவில்லை என்பதையே அர்த்தப்படுத்துகிறது  என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் மல்வத்த பீடத்தின் மகாநாயக்கருடனான சந்திப்பின் போது, வடக்கில் இராணுவத்தின் இருப்பை ஒரு அச்சுறுத்தல் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்குப் பதிலளித்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், “வடக்கு மாகாணத்தில் ஆயுதப்படைகளின் பிரசன்னம் தேவையில்லை.

போர் முடிவடைந்து பல ஆண்டுகளாகி விட்ட நிலையில்,  வடக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னத்திற்கு எந்தவொரு நியாயமும் இல்லை.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், யாழ். குடாநாடு உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் இருந்து குறிப்பிடத்தக்களவில் ஆயுதப்படைகளின் பிரசன்னம் குறைக்கப்படவில்லை.

இன்னமும் இராணுவத்தினர் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் காணிகளை வடக்கில் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இதுவரையில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் இருந்து தான் வெளியேறியுள்ளனர்.

வடக்கில் எத்தனை பிரிகேட் படையினர் நிலை கொள்ள முடியும் என்று  முடிவு செய்யும் அல்லது பரிந்துரைக்கும் வேலை என்னுடையது அல்ல.

ஆனால், அதிகமாக காவல்துறையினரை நிறுத்திக் கொண்டு இராணுவத்தினரை அரசாங்கம் விலக்க முடியும். சட்டம், ஒழுங்கை உறுதிப்படுத்துவதற்கு தேவைப்பட்டால், காவல்துறையினரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க முடியும்.

இராணுவ பிரசன்னத்தைக் குறைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுடன், அவர் யாழ். படைகளின் தளபதியாக இருந்த போது கலந்துரையாடியுள்ளேன்.

வடக்கில் இராணுவத்தினரின் இருப்பு, நல்லிணக்க செயல்முறைகளுக்கு தடையாக உள்ளதுடன் தமிழ் மக்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

வடக்கில் இராணுவத் தளங்களை மூடுவதற்கு மறுப்பதானது, தமிழ் மக்களை அரசாங்கம் நம்பவில்லை என்பதையே அர்த்தப்படுத்துகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

-puthinappalakai.net

TAGS: