காவல் துறையுடன் நான் கண்ட அனுபவம் !

policeமலாயாப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் ஒருவர்  சோமா அரங்கில் ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, மலேசிய காவல்துறை குறித்து ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

அது உண்மைதான் போலும் என்ற எண்ணம், செந்தூல் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம்  என் மனதில் நிழலாடுகிறது. இன்று காலையில் அங்குள்ள ஓர் அதிகாரியைச் சந்திக்கச் சென்றேன். சென்றபோது வாகனத்தை நிறுத்திவிட்டு, நுழைவாயில் முகப்பிடத்தில் இருந்த பொறுப்பாளரிடம் இன்னாரை சந்திப்பதற்காக வந்துள்ளேன் என்றேன்.

என் அடையாள அட்டையை கேட்டுக் கொண்டே அங்கிருந்த பதிவேட்டில் என்னைப் பற்றிய விவரத்தைப் பதிவு செய்யும்படி என்னைக் கேட்டுக் கொண்டார். நான் குனிந்து எழுதிக் கொண்டிருந்தபோது, என் தலைக்கு மேல் சிகரெட் புகை ஊதப்பட்டது.

உடனே நான் நிமிர்ந்து பார்த்தபோது அந்த முகப்பிடப் பொறுப்பாளர் என்னைக் கவனிக்காததைப் போல வேறுபக்கம் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு இருபக்கமும் நின்றிருந்தவர்களைக் கவனித்தேன். ஒருவரும் புகைப் பிடிக்கவில்லை. மீண்டும் நான் குனிந்து சம்பந்தப்பட்ட பதிவேட்டில் எழுதிக் கொண்டிருந்தபோது மீண்டும் சிகரெட் புகை ஊதப்பட்டது.

அது எனக்கு இடையூறாக இருந்ததால் தலைநிமிர்ந்தபோது, சம்பந்தப்பட்ட பொறுப்பாளர் பழையபடி வேறுபக்கம் பார்த்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து என்னை நானே சமாளித்துக் கொண்டு பதிவேட்டில் பதிவு வேலையை நிறைவு செய்துவிட்டு நிமிர்ந்தபோது, அவர் வாகனம் ஓட்டும் உரிமத்தைக் கேட்டார்.

அப்போது, அடையாள அட்டையா அல்லது வாகனம் ஓட்டும் உரிமமா என்று நான் வினவிவேன். ஏதாவது ஒன்று அவர் சொன்னதும், இவ்விரண்டில் ஒன்றைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றேன்.

செந்தூல் மாவட்ட காவல் துறை அலுவலக வளாகத்தில் குறிப்பிட்ட தளத்திற்கு பாரந்தூக்கி மூலம் சென்று, அங்கு நான் சந்திக்க வேண்டிய அதிகாரியின் அறை  எது என்று  தெரியாமல் சற்று தவித்தேன். தேடிப் பார்ப்பதற்கும் இடம் தெரியாததால், எதிரில் தென்பட்ட ஒரு பெண் அதிகாரியிடம் இன்னாரைப் பார்க்க வேண்டும் என்றேன்.

அவரோ சிடுசிடுப்புடன், நான் சொன்ன பெயரைத் திருத்தமாகச் சொல்லி, அவரைத்தான் பார்க்க வேண்டுமா அல்லது நீ சொல்லும் பெயரில் உள்ளவரைச் சந்திக்க வேண்டுமா என்று வீட்டுப்பாடம் செய்யாமல் வகுப்பிற்கு வந்த மாணவனை அதட்டும் ஆசிரியைப் போல அதட்டினார். நீங்கள் குறிப்பிடும் பெயரில் உள்ளவரைச் சந்திக்க வேண்டும் என்றேன்.

அதற்கு அவர், மறுமொழியாக இந்தப் பக்கமாகப் போ என்று இடக் கையால் சைகைக் காட்டினார். அத்துடன் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை; பெயரைக் கூட சரியாக சொல்லத் தெரியவில்லை; இல்லாதவரை எப்படி சந்திக்க முடியும் என்ற பொருளில் பகடியாகப் பேசிக் கொண்டே போனார். நானோ, வாழ்க்கைப் பயணத்தில் இன்று ஒரு பாடம் கற்றுக் கொண்டோம் என்று எண்ணிக் கொண்டேன்.

இணைப் பேராசிரியர் பொது மேடையில் பகிர்ந்து கொண்டதும் ஏறக்குறைய இதைப் போன்றதுதான். ஏதோவொன்றிற்காக புகார் செய்ய காவல் நிலையத்திற்கு அவர் சென்றபோது, அங்கு முகப்பிடத்தில் இருந்த ஒரு பெண் அதிகாரி, இருக்கையில் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டே தன்னுடைய இடக்கையை கன்னத்திற்கு முட்டுக் கொடுத்த வண்ணம் அவரின் புகாரைப் பதிவு செய்ய முற்பட்டாராம்.

ஒவ்வொன்றாக பதிவு செய்து கொண்டே வந்த அவர், மலாயாப் பல்கலைக்கழக்த்தில் பணி புரிகிறவர் என்பதையும் அவர் ஓர் இணைப் பேராசிரியர் என்பதையும் அறிந்த பின், சம்பந்தப்பட்ட அதிகாரி சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தாராம்.

என்றோ ஒரு நாள் அவர் சொன்னது என் மனதின் ஓரத்தில் பதிந்திருந்தது. அந்தத் தகவல் இன்று புதிப்பிக்கப்பட்டது. பொதுவாக, இன்னார் என்று தெரிந்தபின் அதன்பின் சம்பந்தப்பட்ட மனிதருக்கு ஏற்பத்தான் காவல்துறை அதிகாரிகளும் காவலர்களும் பிரதிபலிக்கின்றனர்.

பொதுமக்களின் தோழன் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளும் காவல்துறை, இயல்பாக பொதுமக்கள் அனைவருக்கும் தோழமையுடன் நடந்து கொள்கிறதா என்பதை அவர்களே எடைபோட்டு பார்க்கவும் அதற்கேற்ப அவர்களைத் தக அமைத்துக் கொள்ளவும் முற்பட்டால் காவல்துறையின் மதிப்பு பொது மக்களிடத்தில் இன்னும் உயரும்.

–       சராசரி மனிதன்.