‘வெற்றி பெறும் வேட்பாளர்கள் இருந்தால் தேர்தலில் போட்டியிடுங்கள்’ – பெர்சத்து, அமானா கட்சிகளுக்கு பிகேஆர் அஸ்மின் அறைகூவல்

azminஅமானா மற்றும் பெர்சத்து, ‘வெற்றி வேட்பாளர்’களைத் தேர்தலில் நிறுத்தினால், பிகேஆர் தனது நாற்காலிகளை விட்டுக்கொடுப்பதைப் பற்றி சிந்திக்கும் என அக்கட்சியின் தேசியத் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியுள்ளார்.

இன்று, எதிர்க்கட்சி கூட்டணி மற்றும் அரசு சாரா அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘புதிய மலேசியா உரையாடல்’ கருத்தரங்கில் பேசியப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

1999-ல், பிகேஆர் முதன்முறையாகத் தேர்தலில் நின்றபோது, அக்கட்சிக்கென எந்தவொரு இடமும் இல்லை எனவும், அந்நேரத்தில், டிஏபி மற்றும் பாஸ் நல்ல மனதோடு ஒருசில நாற்காலிகளைப் பிகேஆர் போட்டியிடக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“எனது கொள்கை தெளிவானது, பிகேஆர் ஹராப்பான் கூட்டணியின் புதிய கூட்டாளிகளான அமானா மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கு, சில இடங்களை கொடுப்பதற்கு பரிசீலிக்கும் நேரம் இந்த 14-வது பொதுத் தேர்தல்,” என அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத் தொகுதி ஒதுக்கீட்டில், ‘வெற்றி பெறும் வேட்பாளர்’ எனும் அம்சம் முக்கியக் கூறாகக் கருதப்படுகிறது, என சிலாங்கூர் மந்திரி பெசாருமான அஸ்மின் அலி கூறினார்.

“குறிப்பிட்ட ஒரு வட்டார மக்களின் வாக்குகளைக் கவரும் தகுதி ஒருவருக்கு இருக்குமேயானால், அவரைப் பக்காத்தான் சீட்டில் போட்டியிட வைப்பதில் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை.”

“மேலும், நாங்கள் ‘கூட்டணி’ என்ற அடிப்படையிலேயே வெற்றிபெற விரும்புகிறோம், தனியொரு மனிதனாக அல்ல,” என்றும் அவர் பெர்னாமா செய்திகளிடம் கூறினார்.