லண்டன்: சுரங்க ரயில் தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது

londonலண்டன் சுரங்க ரயிலில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 18 வயது இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கெனட் போலீஸாரால் சனிக்கிழமையன்று டோவர் துறைமுகப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த இளைஞர், உள்ளூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

“இந்த கைது நடவடிக்கை ‘முக்கியமானது’. ஆனால் பயங்கரவாத அச்சுறுத்தல் ‘உயர்’ நிலையிலேயே உள்ளது என்று மெட்ரோபோலிடன் போலீஸ் துணை உதவி ஆணையாளர் நெயில் பாசு தெரிவித்திருக்கிறார்.

பார்சன்ஸ் கிரீனில் சுரங்க ரயிலில் நடைபெற்ற வெடிவிபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

பெரும்பாலோர் சிறிய காயங்களுக்காக சிகிச்சையளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்திருக்கும் லண்டன் அவசர மருத்துவ ஊர்தி சேவை, 3 பேர் இன்னும் மருத்துவமனையில் உள்ளதாக கூறியுள்ளது.

பிரிட்டன் நேரப்படி, சனிக்கிழமை பிற்பகல் அரசின் அவசரகால நடவடிக்கை (கோபுரா) குழுவின் கூட்டம் உள்துறை அமைச்சர் அம்பர் ரூட் தலைமையில் நடைபெறுகிறது.

காவல்படைப் பிரிவுகள் “பாதுகாப்பு நடவடிக்கைகள்” எதையும் மாற்றவில்லை என்று தெரிவித்திருக்கும் நெயில் பாசு, மேலதிக ஆயுதக்காவல் அதிகாரிகளை நிறுத்துவதற்கு முயற்சிகள் இன்னும் எடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

“எமது அதிகாரிகள் அதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த கைது நடவடிக்கை உதவும்” என்று அவர் கூறியுள்ளார்.

“வலுவான புலனாய்வு காரணங்களுக்காக, இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளவர் பற்றிய அதிக விவரங்களை வழங்கப் போவதில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

45 சாட்சிகளிடம் இதுவரை பேசியுள்ளதாகவும், 77 புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பொதுமக்களிடம் இருந்து பெற்றிருப்பதாகவும் மெட்ரோபோலிடன் போலீஸ் உதவி ஆணையாளர் கூறியுள்ளார். -BBC_Tamil